

திமுக கவுன்சிலர் டீட்டா சரவணன்
சென்னை: கரூர் நெரிசல் சம்பவத்தை குறிப்பிட்டு முதல்வர் விஜய் குறித்து சர்ச்சையாக பேசிய காரணத்துக்காக திமுக கவுன்சிலர் டீட்டா சரவணன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், நேற்று (அக்.28) அவருக்கு அம்பத்தூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் ரூ.400 கோடி வரை மோசடி செய்ததாக திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக காவல் ஆணையர் அலுவலகத்துக்கு போலீஸார் அழைத்து வந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நவ.6-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்பேரில் புழல் சிறைக்கு அன்பில் மகேஸை போலீஸார் அழைத்து சென்றனர். அப்போது அவரது ஆதரவாளர்கள் புழல் சிறை வாயிலில் திரண்டனர்.
அப்போது, திமுகவைச் சேர்ந்த சிலர் கரூர் கூட்ட நெரிசலை ஒப்பிட்டு விஜய்-க்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுதொடர்பான காணொளி வைரலானது. இதையடுத்து புழல் காவல் நிலைய போலீஸார் வேலூர் மாநகராட்சி திமுக கவுன்சிலரான டீட்டா சரவணன் உள்ளிட்ட சிலர் மீது வழக்குப் பதிந்தனர்.
இந்நிலையில் விழுப்புரத்தில் உள்ள திமுக பிரமுகர் பிரேம் என்பவர் வீட்டில் தங்கியிருந்த டீட்டா சரவணனை போலீஸார் நேற்று (அக்.28) கைது செய்தனர். பின்னர் அம்பத்தூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட டீட்டா சரவணனுக்கு ஜாமீன் வழங்கி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.