டிஜிட்டல் அரெஸ்ட் செய்ய சைபர் க்ரைம் கும்பலுக்கு உதவிய திருச்சி பொறியியல் பட்டதாரி கைது

திருச்சியில் விடுதியில் இருந்து கைப்பற்றப்பட்ட சிம் பாக்ஸ். | உள்படம்: ஹாஜா நஜிமுதீன்

திருச்சியில் விடுதியில் இருந்து கைப்பற்றப்பட்ட சிம் பாக்ஸ். | உள்படம்: ஹாஜா நஜிமுதீன்

Updated on: 
1 min read

திருச்சி: நாடு முழுவதும் டிஜிட்டல் அரெஸ்ட் உள்ளிட்ட சைபர் க்ரைம் குற்றங்களுக்கு உறுதுணையாக இருந்து, பல நூறு கோடி ரூபாய் மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக திருச்சியை சேர்ந்த ஜனநாயக வாலிபர் சங்க(டைபி) நிர்வாகியை மாநகர போலீஸார் கைது செய்தனர்.

சென்னை தொலைத்தொடர்பு துறையில் இருந்து திருச்சியில் குறிப்பிட்ட பகுதியில் இருந்து பிராட்பேண்ட் பயன்பாடு அதீத அளவில் இருக்கிறது என்பதை கண்டறிந்தனர்.

தினமும் பல லட்ச ரூபாய் மதிப்பிலான டேட்டா திருடப்படுவது குறித்தும் அதை பயன்படுத்துபவர்களை பிடிக்க நடத்திய தேடுதல் வேட்டையில் திருச்சி புத்தூர் நால்ரோடு பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் இருந்து திருச்சி உறையூர் மேட்டுத்தெருவை சேர்ந்த ஹாஜா நஜிமுதீன் (41) என்ற பொறியியல் பட்டதாரியை கைது செய்தனர். இவர் ஜனநாயக வாலிபர் சங்கத்தில் (டைபி) மேற்கு பகுதி செயலாளராக இருந்தார்.

வெளிநாடு செல்பவர்களுக்கு டிக்கெட் புக் செய்து கொடுக்கும் வேலையில் இருந்தபோது மலேசியாவை சேர்ந்த சில சைபர் க்ரைம் குற்றவாளிகளுடன் இவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் மூலமாக சிம் பாக்ஸ் ஒன்றை வாங்கி லாட்ஜில் உள்ள அறையில் வைத்து பராமரித்து உள்ளார். லேண்ட் லைன் நம்பர் மோடம் இணைப்பு கொடுத்து, சிம்கள், இ-சிம்கள் என மொத்தம் 192 சிம் கார்டுகளுக்கு இணைப்பு கொடுத்துள்ளார் என்பது தெரியவந்தது.

மேலும், தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையிலும் ஒரு அறையை எடுத்து சிம் பாக்ஸ் வைத்து தினமும் பல லட்ச ரூபாய் மதிப்பிலான டேட்டாக்களை பயன்படுத்தி வந்துள்ளார். அத்துடன் நாடு முழுவதும் டிஜிட்டல் அரெஸ்ட் உள்ளிட்ட சைபர் க்ரைம் குற்றங்களில் பல நூறு கோடி ரூபாயை சம்பாதிக்க உறுதுணையாக இருக்க உதவி செய்துள்ளார்.

சிம் பாக்ஸ் தடையின்றி செயல்படுவதற்காக இன்வெர்ட்டர் உள்ளிட்ட உபகரணங்களுடன் 24 மணி நேரமும் மேற்பார்வையிட்ட இவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் வரை, மாதந்தோறும் மலேசியாவில் இருந்து மாத சம்பளம் ரூ.30 ஆயிரம், அறை வாடகை, மின் கட்டணம் ஆகியவற்றை அனுப்பி வைத்துள்ளனர் என போலீஸார் தெரிவித்தனர்.

அடிக்கடி மாறும் லொகேஷன்

சைபர் க்ரைம் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் சிம் பாக்ஸ் என்னும் கருவியை பயன்படுத்தி வருகின்றனர். வெளிநாட்டில் இருக்கும் ஒருவர் இந்தியாவில் இருக்கும் அதிகாரி போல பேசி மிரட்ட இந்த கருவி பயன்படுகிறது. இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள இந்த சிம் பாக்ஸை பயன்படுத்தி பேசும்போது அவர்களின் இருப்பிடத்தை கண்டறிய முடியாது.

அவர்கள் வெளிநாட்டிலிருந்து பேசினாலும், அவர்களது இருப்பிடத்தை கண்டறிய முயற்சித்தால் அவர்கள் இந்தியாவின் ஏதோ ஒரு பகுதியிலிருந்து பேசுவது போல் தான் காட்டும். ஒவ்வொரு விநாடிக்கு ஒருமுறை லொகேஷன் மாறும் எனவும் போலீஸார் தெரிவித்தனர்.

<div class="paragraphs"><p>திருச்சியில் விடுதியில் இருந்து கைப்பற்றப்பட்ட சிம் பாக்ஸ். | உள்படம்: ஹாஜா நஜிமுதீன்</p></div>
பசும்பொன்னில் தேவர் குருபூஜை விழா தொடங்கியது: குடியரசுத் துணைத் தலைவர் நாளை வருகை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in