பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய தமிழக அரசுக்கு விவசாய சங்கங்கள் வலியுறுத்தல்

10 அம்ச கோரிக்கைகளுடன் அக். 8ல் போராட்டம் என அறிவிப்பு
பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய தமிழக அரசுக்கு விவசாய சங்கங்கள் வலியுறுத்தல்
Updated on
1 min read

விருதுநகர்: பயிர் கடனை அரசு முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைளை வலியுறுத்தி அக்டோபர் 8ம் தேதி மதுரையில் 5 ஆயிரம் விவசாயிகள் பங்கேற்கும் தொடர் போராட்டம் நடத்தப்படும் என தென் மாவட்ட விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ் விவசாயிகள் சங்கம் ஆகியவை இணைந்து அறிவித்துள்ளன.

தென் மாவட்ட விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விருதுநகரில் இன்று நடைபெற்றது. இதற்கு தென் மாவட்ட விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ராம்பாண்டியன் தலைமை வகித்தார். தமிழ் விவசாயிகள் சங்கத்தின் மதுரை மாவட்டத் தலைவர் சீனிவாசகன் முன்னிலை வகித்தார்.

தென் மாவட்ட விவசாயிகள் சங்கம் பொதுச் செயலாளர் அர்ச்சுணன், தமிழ் விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் நாராயணசாமி, தென் மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் அய்யனார், ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் மலைச்சாமி, விருதுநகர் மாவட்டச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், சிவகங்கை மாவட்டத் தலைவர் சோனையன், சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் மாரியப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில், தென் மாவட்ட விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் அர்ச்சுணன், தமிழ் விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் நாராயணசாமி ஆகியோர் இணைந்து அளித்த பேட்டியில், “தமிழக முதல்வர் விஜய் தேர்தல் வாக்குறுதி அடிப்படையில் விவசாயிகளின் பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

பயிர் காப்பீட்டுத் திட்டத்தை முழுமையாக மாற்றி அமைக்க வேண்டும். தனிப்பட்ட விவசாயிகளிடம் பிரிமியம் தொகை வசூல் செய்வதால் தனிப்பட்ட விவசாயி சர்வே எண்ணில் ஏற்படும் மகசூல் பாதிப்புக்கு காப்பீடு வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள காப்பீடு தொகை அனைத்தையும் உடனே வழங்க வேண்டும்.

வறட்சி பாதிப்பு என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் உடனே வழங்க வேண்டும். வைகை அணை, மேட்டூர் அணை, பிளவக்கல் அணை, பேச்சிப்பாறை அணை உள்ளிட்ட அனைத்து அணைகளும் தூர் வாரப்பட வேண்டும். ஏரிகள் குளங்கள் நீர் நிலைகள் அனைத்தையும் தூர் வாரி பாதுகாக்க வேண்டும்.

நெல் கொள்முதல் மையங்களில் நடக்கும் முறைகேடுகளைக் களைய வேண்டும். மக்காச் சோளம், பருத்தி, மிளகாய் ஆகிய விளைபொருட்களையும் அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.

போதுமான அளவு சேமிப்புக் கிடங்குகளை போர்க்கால அடிப்படையில் அமைக்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 8ம் தேதி மதுரையில் 5 ஆயிரம் விவசாயிகளைத் திரட்டி தொடர் போராட்டம் நடத்தப்பட உள்ளது.” எனத் தெரிவித்தனர்.

பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய தமிழக அரசுக்கு விவசாய சங்கங்கள் வலியுறுத்தல்
“டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது” - அமைச்சர் அருண்ராஜ்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in