மேலூர் தொகுதியில் மிளிரப் போவது யார்?

காங். - அதிமுக கடும் போட்டி | வாக்குகளை பிரிக்கும் நாதக, தவெக
மேலூர் தொகுதியில் மிளிரப் போவது யார்?
Updated on
2 min read

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணியிலுள்ள காங்கிரஸ் கட்சிக்கும், அதிமுகவுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.இதில் அக்கட்சிகள் பெரிதும் நம்பும் வாக்குகளை நாதக, தவெக மற்றும் சுயேச்சைகள் பிரிக்க வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

மதுரை மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளில் புறநகர் பகுதியில் உள்ள மேலூர் தொகுதி விவசாயம் நிறைந்த பகுதியாகும். மேலூர் வட்டம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகள் அடங்கிய தொகுதி. இத்தொகுதியில் எளிமைக்கு இலக்கணமான காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் கக்கன் வென்றுள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்குள்ள இத்தொகுதியில் 7 முறை அக்கட்சி வென்றுள்ளது. அதிமுக 6 முறையும், திமுக 2 முறையும், தமாகா ஒரு முறையும் வென்றுள்ளன.

இத்தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஆர். சாமி தொடர்ந்து மூன்று முறை வென்றுள்ளார். தற்போது போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பெரியபுள்ளான் என்ற செல்வமும் 3-வது முறையாக போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து திமுக-காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் பெ.விஸ்வநாதன் போட்டியிடுகிறார்.

இவர் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் மற்றும் தெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் ஆவார். பொது தொகுதியில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளரை காங்கிரஸ் கட்சி களம் இறக்கியுள்ளது.

நாதக சார்பில் கோட்டைக் குமார், தவெக சார்பில் ஏ.மதுரை வீரன் ஆகியோர் போட்டியிடு கின்றனர். மேலும் சுயேச்சையாக மேலூர் ஒருபோக பாசன விவசாயிகள் நலச்சங்கத் தலைவர் முருகன் மற்றும் சசிகலாவின் அஇபுமமுக சார்பில் வேட்பாளர் சோனியாகாந்தி ஆகியோரும் களம் காண்கின்றனர்.

காங்கிரஸில் பெ.விஸ்வநாதனை களமிறக்கியதால் அதிருப்தி அடைந்த உள்ளூர் காங்கிரஸார் உள்ளடி வேலை பார்ப்பதாக புகார்கள் உள்ள நிலையில், அமைச்சர் பி.மூர்த்தி ஆலோசனையின்பேரில் திமுகவினர் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக முழுமூச்சாக களமிறங்கி வேலை பார்க்கின்றனர்.

தொடர்ந்து 3-வது முறையாக களமிறங்கியுள்ள அதிமுக வேட்பாளர் பெரியபுள்ளான் என்ற செல்வம் அதிமுக, அமமுக வாக்குகளை நம்பி போட்டியிடுகிறார். தொகுதியில் டங்ஸ்டன் பிரச்சினை குறித்து சட்டப்பேரவையில் பேசி முதல்வரின் கவனத்தை ஈர்த்தவர் என்றாலும், கட்சியின் கிளைச் செயலாளர்கள் உள்ளிட்டோர் அதிருப்தியில் உள்ளனர்.

இவரை எதிர்த்து ஒரு போக பாசன விவசாயிகள் நலச் சங்க தலைவர் முருகன், சசிகலாவின் அஇபுமமுக கட்சி சார்பில் சோனியாகாந்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரும் அதிமுக, அமமுக ஆதரவு வாக்குகளை கணிசமாக அறுவடை செய்யும் வாய்ப்புள்ளது.

மேலும் தவெக சார்பில் போட்டியிடும் ஏ.மதுரைவீரன் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து வந்தவர் என்பதால் அக்கட்சியின் வாக்குகளை ஓரளவு பிரிப்பார். நாதக வேட்பாளர் கோட்டைக் குமார் இளைஞர்களின் வாக்குகளை பெறும் வாய்ப்புள்ளது.

தொகுதியில் காங்கிரஸ், அதிமுக இடையே நேரடி போட்டி என்றாலும் சுயேச்சை உட்பட மற்ற கட்சிகள் வாக்குகளை பிரிப்பதால் போட்டி கடுமையாக உள்ளது.

மேலூர் தொகுதியில் மிளிரப் போவது யார்?
மொடக்குறிச்சி தொகுதியில் மகுடம் சூடப்போவது யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in