

நெல்லை: “தமிழகத்தை சீரழிக்க வேண்டும் என்ற நோக்கில், போதைப்பொருள் புழக்கம் தூண்டப்படுகிறதா என கேள்வி எழுகிறது” என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.
நாங்குநேரி அருகே பெரும்பத்தில் சம்பவத்தில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நெல்சன் மற்றும் கணேசனை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதுபோல் பெரும்பத்தில் உயிரிழந்த ஜான் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “நெல்சன், கணேசன் ஆகிய இருவருக்கும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். உயிரிழந்த ஜான் குடும்பத்துக்கு ரூ.6 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும். அவரது குழந்தைகளின் கல்விச் செலவை காங்கிரஸ் ஏற்கும்.
சென்னையில் ரவுடிகளை ஒடுக்குவதில் காவல்துறை ஆணையர் அருண் காட்டும் தீவிரத்தைப் போல், திருநெல்வேலி சரக காவல்துறையும் ரவுடிகளின் பட்டியலை தயார் செய்ய வேண்டும். அந்தந்த பகுதி காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் உளவுத் துறையினர் தங்கள் எல்லையில் நடக்கும் குற்றங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும்.
அசம்பாவிதம் நடக்கும் முன்பே அதை தடுக்க தவறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். திருநெல்வேலி காவல்துறையின் வசதிகள் மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தத் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சமீபகால வன்முறைச் சம்பவங்களுக்குப் போதைப்பொருள் புழக்கமே முக்கிய காரணம்.
ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்துக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதைத் தடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. தமிழகத்தை சீரழிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்தப் போதைப்பொருள் புழக்கம் தூண்டப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது. ஒரு சில சமூக விரோத கும்பல்கள் திட்டமிட்டு இத்தகைய வன்முறைகளில் ஈடுபடுவது பெரும் சங்கடத்தை ஏற்படுத்துகிறது” என்று அவர் தெரிவித்தார்.