

மதுரை: நாங்குநேரி இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரி நீதிபதிகளிடம் வழக்கறிஞர் ஒருவர் முறையீடு செய்தார்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி காவல் சரகம், பெரும்பத்து பஜாரில் இரவு பைக்கில் வந்த 9 பேர் கொண்ட மர்ம கும்பல், அங்கு டீ கடை அருகே சாலையில் நின்று கொண்டிருந்த பொதுமக்களை சரமாரியாக வெட்டியது. இந்தச் சம்பவத்தில் வடமாநில செங்கல் சூளை தொழிலாளி உள்பட இரண்டு பேர் பலியாகினர். கண்மூடித்தனமாக வெட்டியதில் 6 பேருக்கு பலத்த வெட்டுக் காயம் விழுந்தது.
இந்தக் கொடூர தாக்குதலில் பெரும்பத்து இந்திரா காலனியை சேர்ந்த ஜான் (42) மற்றும் வட மாநில செங்கல் சூளை தொழிலாளி திருநாத் கட்டா ஆகிய இரண்டு பேரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர். பெரும்பத்து பகுதியைச் சேர்ந்த ஆபிரகாம் மகன் நெல்சன் (58), பால்வண்ணன் மகன் பிரபாகரன், வைகுண்டம் மகன் ராமசாமி, வீராங்குளம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் கணேசன் (53) ஆகியோர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து 9 பேரை கைது செய்து உள்ளனர். இந்த நிலையில், உயர் நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதி ராமன் அமர்வு இன்று காலையில் வழக்குகளை விசாரிக்க தொடங்கியது.
அப்போது, வழக்கறிஞர் ஆயிரம் கே.செல்வகுமார் என்பவர் நீதிபதிகள் முன்பு ஆஜராகி, ‘நாங்குநேரியில் வடமாநில தொழிலாளி உட்பட இரண்டு பேர் கொல்லப்பட்டதற்கு தமிழக அரசு சார்பில் இதுவரை எந்த நிவாரணமோ, இழப்பீடோ அறிவிக்கப்படவில்லை.
புலம்பெயர்ந்த தொழிலாளர் குடும்பத்தின் துயரங்களைக் கருத்தில் கொண்டு, எந்தக் காரணமும் இல்லாமல் கொலை செய்யப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு தேவையான நிவாரணம் வழங்குவது தொடர்பாகவும், இந்த விவகாரத்தை நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும்’ என்று முறையிட்டார்.
பின்னர் நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து உரிய அதிகாரிகளிடம் கேட்டு அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.