

ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்
சென்னை: "தமிழகத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட கலந்தாலோசித்து வருகிறோம்" என்று லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவரும், புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி எம்எல்ஏ-வுமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வியாழக்கிழமை கூறியது: “கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ், பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பியது தொடர்பாக, அந்த பெண் ஐஏஎஸ் அதிகாரியின் புகார் நீண்ட காலமாக நிலுவையில் இருந்தது. இது தொடர்பாக, அருள் விக்னேஷை கைது செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு பதிவு செய்தேன்.
இன்ஸ்டாகிராமில் நான் பதிவு செய்த சில நிமிடங்களில் 47 ஆயிரம் பேர் பார்த்திருந்தனர். அரைமணி நேரத்தில் பார்த்தவர்கள் எண்ணிக்கையை எனது இன்ஸ்டாகிராமில் ஊடுருவி, 3 ஆயிரம் பேர் பார்த்ததாக குறைத்துவிட்டனர். இது, தவெக ஆட்சியில் வழக்கமாக நடைபெறுகிறது.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, முதல்வர் விஜய்யின் அரசியல் விவகாரங்களுக்கான ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோரின் நிறுவனங்கள் செய்வதாக சந்தேகிக்கிறேன். இதை வேண்டுமென்றே செய்கின்றனர்.
இது தொடர்பான புகாரை, புதுச்சேரி சைபர் குற்றப்பிரிவு போலீஸாருக்கு பரிந்துரை செய்து உள்ளோம். உடனடியாக, விசாரணை நடத்தி, இப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும்.
சமூக பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பவர்கள் நசுக்கப்படுகிறார்கள். இது காலம் காலமாக தொடர்கிறது. எங்கள் கருத்து மக்களுக்கு நேரடியாக சேர வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.
கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக முதலில் குற்றச்சாட்டு வைத்தபோது, யாரும் இல்லை என்று ஆணித்தரமாக பேசினர். கூட்டணி கட்சி என்ற பெயரில் நிறைய பேர் முட்டு கொடுத்தனர். மாவட்டத்துக்கு ஆட்சியருக்கே இந்த நிலை என்றால், பொதுமக்களுக்கு மிகப் பெரிய சீரழிவு நடைபெறுகிறது. பெண்கள் பாதுகாப்பு மிகவும் மோசமாகி உள்ளது.
தமிழகத்தில் போதைப்பொருள் தடுப்பு, பெண்கள் பாதிப்பு என்று குற்றச்சாட்டு வைத்தும், நியாயமாகவும் நேர்மையாகவும் இருப்போம், பெண்களுக்கு அண்ணனாக, குழந்தைகளுக்கு தாய்மாமானாக இருப்போம் கூறி ஆட்சிக்கு வந்தனர். ஆனால், தவெக ஆட்சி மோசமான நிலையில் உள்ளது.
தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம் மரபாக உள்ள திருப்பரங்குன்றத்தில் தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தவிட்டும் அதை ஏற்றாமல் கீழ்த்தரமாக நடந்துள்ளனர்.
நாம் எல்லாரும் மாற்றத்தை எதிர்பார்த்தோம். இது திமுகவின் 2.0 ஆக தவெக ஆட்சி உள்ளது. மிக மோசமான நிலை நோக்கி போய் கொண்டுள்ளது. தவெக சொன்னது ஒன்று, செய்வது ஒன்று. ஏமாற்றமான ஆட்சியாக உள்ளது.
தமிழகத்தில் இடைத்தேர்லில் போட்டியிடவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் களம் இறங்க கலந்தாலோசித்து வருகிறோம்” என்று அவர் கூறினார்.