

சீமான் | கோப்புப்படம்
திருநெல்வேலி: “நான் முதல்வராக இருந்திருந்தால், திருப்பரங்குன்றம் பிரச்சினையை அரை மணிநேரத்தில் தீர்த்து வைத்திருப்பேன்” என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் நடைபெற்ற விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் விழாவில் விழாவில் அவர் பேசியது: “உலகில் தலைசிறந்த ஒருவரை நாம் தலைவராகப் பெற்றிருக்கிறோம். தோல்வியிலும் நாம் திமிரோடு இருக்கிறோம்.
தமிழ் எழுதவும், படிக்கவும், பேசவும் தெரியாத பல தலைமுறைகள் தற்போது உருவாகி வருவதை ஒப்புக்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. தமிழர்களுக்கு தாய்மொழி இல்லாத நிலை உருவாகி வருகிறது. நாட்டை ஆள்பவர்களுக்கே தமிழ் பேசத் தெரியாத நிலை இருக்கிறது.
மொழியின் மீதான பற்றும், இனப்பற்றும் குறைந்து வருகிறதா என்ற கேள்வி எழுகிறது. தமிழுடன் சமஸ்கிருதம் கலந்து கன்னட மொழி உருவானதைப்போல, தற்போது தமிழுடன் ஆங்கிலம் கலந்து பேசும் நிலை அதிகரித்து வருகிறது.
சீமான் தோற்றுப்போனாரா, ஆம், உண்மைதான். கேவலமான, கேடுகெட்ட பணம் கொடுக்கும் தேர்தலில்தான் நான் தோற்றுப்போனேன். தேர்தலில் நான் தோற்றது மக்களின் தவறு.
நான் பேசும் கருத்துகள் மக்களிடம் உரிய அளவில் சென்றடையவில்லை. அந்த நிலையை மாற்ற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நாம் தமிழர் கட்சி கூட்டங்களில் புத்தகங்கள் விற்பனை செய்யப்படுவது தனித்துவமானது.
நாம் தமிழர் கூட்டத்தில் சுண்டல், பஜ்ஜி விற்றான் என்று இல்லாமல் புத்தகம் விற்றான் என்று வரும். என் பிள்ளைகள் படிக்காத புத்தகங்களை பரிசாகத் தருகிறார்கள். அவர்களை பார்க்கும்போது நம்பிக்கை பிறக்கிறது. இன்று வெல்லவில்லை. அவ்வளவுதான். நாளை வெல்லப்போகிறேன். எனக்குள் பல்லாயிரக்கணக்கான முன்னவர்கள் இருக்கிறார்கள்.
தலைவர்கள் உப்பைப் போலவும், மெழுகுவர்த்தியைப் போலவும் இருக்க வேண்டும். எங்களை நிராகரிப்பவர்களால் கொள்கை பாதிக்கப்படாது. திரையரங்குகளில் தலைவர்களை தேடிக்கொண்டிருக்கிறார்கள். போதைக்கு முன்னுரிமை கொடுப்பவர்களை போராட்டத்திற்கும் புரட்சிக்கும் தயார்படுத்த முடியாது.
மேகேதாட்டுவில் அணை கட்டியே தீருவேன் என்று கர்நாடக தரப்பில் கூறப்படுகிறது. அந்த அணைக்கான கட்டுமானப் பொருட்கள் தமிழக பகுதிகளில் இருந்தே செல்லக்கூடிய சூழல் இருக்கிறது.
இப்போது நான் முதல்வராக இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும். அணை கட்டியே தீருவேன் என ஒருவர் கூறும்போது, தமிழக அரசியல் தலைவர்கள் அவருடன் நட்புறவாக செயல்படுகிறார்கள். நான் முதல்வராக இருந்திருந்தால் திருப்பரங்குன்றம் பிரச்சினையை அரை மணி நேரத்தில் தீர்த்து வைத்திருப்பேன்.
முதல்வர் சாலையில் அதிக பாதுகாப்பு வாகனங்களுடன் பயணிக்கிறார். காமராஜர் போன்ற தலைவர்கள் இவ்வாறு பாதுகாப்பு அணிவகுப்புடன் சென்றார்களா?
முன்னாள் முதல்வர்கள் மு.க.ஸ்டாலின், பழனிசாமியுடன் பொதுவான விமானப் பயணங்களில் சென்றிருக்கிறேன். ஆனால் தற்போதைய முதல்வருக்கு தனி விமானம், ஹெலிகாப்டர் போன்றவை எதற்காக, அவற்றுக்கான செலவை யார் ஏற்கிறார்கள்?
படித்து சொன்னால் கேட்க மாட்டான், நடித்துச் சொன்னால்தான் கேட்பான் என்பதால் நான் நடிக்கப் போய்விட்டேன். இப்போது நான்தான் பிஸி ஆர்ட்டிஸ்ட்.
தமிழக வெற்றி கழகத்தை விமர்சித்தால் திமுகவிடம் பணம் பெற்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் விலை தீர்மானிக்க முடியாத இருவர் இந்த உலகத்தில் இருக்கிறார்கள். பிரபாகரனும் அவருடைய தம்பி நானும் தான்.
பண ஆசையும் பதவி வெறியும் இருந்திருந்தால் ஏற்கெனவே கூட்டணிக்கு சென்று சட்டப் பேரவை உறுப்பினராகியிருக்க முடியும். ஆனால் கொள்கை அடிப்படையில் தனித்து அரசியல் செய்து வருகிறோம். தேர்தலில் தோல்வியடைந்தாலும் தொடர்ந்து அரசியல் களத்தில் நிற்கிறோம். நாம் தோற்றும் களத்தில் நிற்கிறோம். அவர் தோற்றிருந்தால் எங்கே இருந்திருப்பார்.
அம்பாசமுத்திரத்தில் வீடு வீடாகச் சென்று மக்களிடம் வாக்கு கேட்பது, மக்களின் கால்களில் விழுவது போன்ற தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளோம். மக்களின் மனதை வென்று சட்டப் பேரவைக்கு செல்வதே தங்களின் இலக்கு” என்று அவர் பேசினார்.