

கோப்புப் படம்
சென்னை: தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இதுவரை 183 கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையில் புதிய அரசு பதவியேற்றதை தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களில் புனரமைப்புப் பணிகள் மற்றும் கும்பாபிஷேகங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 43,646 கோயில்கள், 27 சமணக் கோயில்கள், 45 மடங்கள், 83 மடத்துடன் இணைந்த கோயில்கள் மற்றும் 1,330 அறக்கட்டளைகள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.
திமுக ஆட்சிக் காலத்தில் (2021 - 2026 பிப்ரவரி வரை), 20 முதல் 400 ஆண்டுகளாகக் கும்பாபிஷேகம் நடைபெறாத 4,332 கோயில்கள் கண்டறியப்பட்டு, ரூ.1,190 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
தற்போது தவெக ஆட்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ரமேஷ், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், தவெக அரசு பொறுப்பேற்று, கடந்த மே 14-ம் தேதி முதல் தற்போது வரை, குறுகிய காலத்திலேயே 183 கோயில்களில் புனரமைப்புப் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.
முந்தைய ஆட்சியில் தொடங்கப்பட்ட ஆன்மிகப் பணிகளைத் தொய்வின்றித் தொடர்வதோடு, பழமையான கோயில்களின் தொன்மை மாறாமல் பாதுகாப்பதில் இந்த அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அறங்காவலர் தேர்வு விண்ணப்பம்
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் இதுவரை 9,205 கோயில்களுக்குப் பரம்பரை முறைசாரா அறங்காவலர்களை நியமிக்க விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கடந்த மாதம் 14-ம் தேதி 214 கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமிக்க அறநிலையத்துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஜூலை 22 (நேற்று) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த காலஅவகாசத்தை நீட்டித்து அறநிலை யத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஆக.12-ம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
விருப்பமுள்ளவர்கள் முறையான விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளம் வழியாகப்பதிவேற்றம் செய்யலாம். மேலும், சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம் என்று அறநிலையத்துறை கூறியுள்ளது.