

சென்னை: ‘கிட்னி திருட்டு வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அறவழி போராட்டங்களுக்கு தமிழக அரசு எதிராக இருக்காது’ என்று சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தேசிய நல்வாழ்வு குழும அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், எச்டிஎஃப்சி வங்கியின் சிஎஸ்ஆர் நிதியில் ரூ.7.70 கோடியில் 11 அரசு தலைமை மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள 10 படுக்கை வசதி கொண்ட தீவிர சிகிச்சை பிரிவுகளைத் தொடங்கி வைத்தார்.
சுகாதாரத்துறை செயலர் தாரேஸ் அகமது, தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அனீஷ் சேகர், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் சோமசுந்தரம், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் ராஜ்மோகன், எச்டிஎஃப்சி வங்கியின் துணை தலைவர் என்.பிரேம் ஆனந்த் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அப்போது, அமைச்சர் அருண்ராஜ் பேசியதாவது: எச்டிஎஃப்சி வங்கியின் சிஎஸ்ஆர் நிதியின் கீழ் ரூ.7.70 கோடியில் 11 அரசு தலைமை மருத்துவமனைகளில் 10 படுக்கை வசதி கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு தற்போது பொதுமக்களின் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் கட்டமைப்பை மேம்படுத்த, அனைத்து தொழில் நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் சிஎஸ்ஆர் நிதி, இதர நன்கொடைகளை வழங்க வேண்டும். கிட்னி திருட்டு தொடர்பாக வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு, தற்போது நாமக்கல் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள்மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் மூலம் சம்பந்தப்பட்ட மருத்துவர்களின் மீது நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கிட்னி திருட்டு வழக்கில், எந்த ஒரு தலையீடும் இல்லாமல் சட்டத்துக்கு உட்பட்டு நியாயமான நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏழை, கிராமப்புற மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வு தேவையில்லை என்பது இந்த அரசின் நிலைப்பாடு. அறவழி முறையில் நடைபெறும் எந்த ஒரு போராட்டத்துக்கும் இந்த அரசு எதிராக இருக்காது.
கல்வி என்பது மாநிலப் பட்டியலில் இருக்க வேண்டும் என்பதே இதுபோன்ற பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வாகும். நீட் தேர்வுக்கு எதிராக நடைபெறும் மாணவர்களின் உணர்வுகளுக்கு மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும்.
தனியார் கல்லூரிகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட அதிக கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சித்த மருத்துவம் சார்ந்த வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.