

கே.ஐ. மணிரத்தினம், சிந்தனைச்செல்வன்
கடலூர் மாவட்டத்தில் உள்ள இரு தனித்தொகுதிகளில் ஒன்று காட்டுமன்னார் கோவில். பட்டியல் இன மக்கள் அதிகம் உள்ள தொகுதி இது. ஒரு காலத்தில் காங்கிரஸ் இங்கு பெரும் செல்வாக்குடன் இருந்தது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த எல். இளையபெருமாள் இந்த தொகுதியைச் சேர்ந்தவர். அகில இந்திய தீண்டாமை ஒழிப்புக் கமிட்டித் தலைவராக இருந்து, பல்வேறு சீர்திருத்தங்களை அப்போதைய மத்திய அரசுக்கு அளித்தவர். அவரால் வளர்ந்து, இங்குள்ள பட்டியல் இன மக்களால் இத்தொகுதியில் காங்கிரஸ் பெரும் செல்வாக்குடன் இருந்தது.
1967 -ம் ஆண்டு தேர்தலில் இந்தத் தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றியது. தொடர்ந்து திமுக வெற்றி பெற, பின்னர் மீண்டும் 1984-ம் ஆண்டு காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதன்பிறகு கடந்த 40 ஆண்டுகளாக திமுக, அதிமுக கூட்டணிகளில் மாறிமாறி வலம் வந்த காங்கிரஸூக்கு இரு முறை மட்டுமே இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டது.
காங்கிரஸ் நீங்கலாக திமுக, ஜனநாயக பேரவை, அதிமுக, விசிக இத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளன. 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் விசிக வெற்றி பெற்று, சிந்தனைச் செல்வன் எம்எல்ஏவானார்.
இந்த நிலையில். ‘தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்து தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியை வளர்த்த முன்னள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் எல். இளையபெருமாளின் சொந்த ஊரான காட்டுமன்னார்கோவில் தொகுதியை, இந்த முறை காங்கிரஸாருக்கே ஒதுக்க வேண்டும்” என்று அக்கட்சியின் நிர்வாகிகள், எல்.இளையபெருமாளின் வழி வந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்காக இத்தொகுதியில் உள்ள காங்கிரஸார் தங்கள் கட்சித் தலைமையையும் அணுகி வருகின்றனர்.
இதுபற்றி பேசிய காட்டுமன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்த தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவர் கே.ஐ. மணிரத்தினம், ‘‘காட்டுமன்னார்கோவில் தொகுதியை காங்கிரஸூக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்’ என்று எங்கள் பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், கையெழுத்து இயக்கத்தில் பெற்ற கையெழுத்து பிரதிகள், தொகுதிகளில் முக்கிய விஷயங்களுக்கு நடத்திய ஆர்ப்பாட்டங்கள் இவற்றைத் தொகுத்து எங்கள் கட்சித் தலைமைக்கு அளித்திருக்கிறோம்.
எங்கள் கட்சித் தலைமை, கூட்டணித் தலைமையான திமுகவிடம் இத்தொகுதியை வலியுறுத்தி கேட்டு வருகிறது. இந்த முறை காட்டுமன்னார்கோவிலை எங்களுக்கு கூட்டணிக் கட்சியினர் விட்டுத் தர வேண்டும்” என்று தெரிவிக்கிறார்.
ஒருவேளை, இத்தொகுதி காங்கிரஸூக்கே ஒதுக்கப்படும் பட்சத்தில், கே.ஐ.மணிரத்தினமே களம் இறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, விடுதலைச் சிறுத்தைக் கட்சியினர் இத்தொகுதியை மீண்டும் பெற ஆர்வம் காட்டி வருகின்றனர். தொடர்ந்து இங்கு வெற்றி பெற வேண்டும் என்று களத்தில் முனைப்போடு செயல்பட்டு வருகின்றனர்.
“கடலூர் மாவட்டத்தில், பிற தொகுதிகளைக் காட்டிலும் விடுதலைச் சிறுத்தைகள் எழுச்சியாக உள்ள தொகுதி இது” என்றும் அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். அப்படி விசிகவுக்கு மீண்டும் இத்தொகுதி ஒதுக்கப்படும் பட்சத்தில், மீண்டும் சிந்தனைச் செல்வனே போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில் திமுக கூட்டணிக்குள் காட்டுமன்னார்கோவில் தொகுதியைப் பெறுவதில் காங்கிரஸ் - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடையே கடும் போட்டி நிலவுகிறது.