

மதுரையில் புதிய கட்சிக் கொடியை அறிமுகப்படுத்திய மகாத்மா சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள்.
படம்: நா.தங்கரத்தினம்
மதுரை: மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்தவர் மகாத்மா சீனிவாசன். காங்கிரஸ் மனித உரிமை பிரிவின் மாநில தலைவராக இருந்தார். திமுக கூட்டணியில் மேலூர் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், மேலூர் தொகுதியில் போட்டியிட சீட் கேட்டார்.
ஆனால், வேட்பாளராக முன்னாள் எம்பி விஸ்வநாதன் அறிவிக்கப்பட்டார். இதனால் அதிருப்தி அடைந்த சீனிவாசன் காங்கிரஸ் போட்டி வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தார்.
கட்சியின் அங்கீகார கடிதம் இல்லாததால் அவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய சீனிவாசன் மதச்சார்பற்ற சோசியலிச காங்கிரஸ் (எம்எஸ் காங்கிரஸ்) என்ற புதிய கட்சியை நேற்று தொடங்கினார்.
புதிய கட்சியின் பெயர், கொடி மற்றும் சின்னத்தை அறிமுகப்படுத்தி அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மேலூர் தொகுதிக்கு விருப்ப மனு அளிக்காத வெளியூரைச் சேர்ந்தவரை வேட்பாளராக அறிவிக்க செய்துள்ளார் மாணிக்கம் தாகூர் எம்.பி. அவர் தோற்பது நூறு சதவீதம் உறுதி.
இதைத்தான் மாணிக்கம் தாகூரும் விரும்புகிறார். திமுக கூட்டணியை சிதம்பரம் உறுதி செய்ததால் இந்த தோல்வியால் அவரை வேதனையடைய வேண்டும்.
இதைப் பயன்படுத்தி அடுத்த தேர்தலில் தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதே மாணிக்கம் தாகூரின் விருப்பமாக உள்ளது. இத்தேர் தலில் அதிமுக வேட்பாளர் பெரியபுள்ளானை நாங்கள் ஆதரிக்க உள்ளோம் என்றார்.