“வாக்குச்சீட்டு முறையிலும் 4 மாநில எம்எல்சி தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி” - நயினார் நாகேந்திரன் விமர்சனம்

 நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன்

Updated on: 
1 min read

சென்னை: “கர்நாடகா, உத்தரப்பிரதேசம் மகாராஷ்டிரா, பிஹார் மாநிலங்களில் நடந்த சட்ட மேலவைத் தேர்தல்களில் காகித வாக்குச்சீட்டு (பேலட் பேப்பர்) முறையில் தேர்தல் நடந்தும் காங்கிரஸால் ஒரு இடத்தில்கூட வெற்றி பெற முடியவில்லை” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘கர்நாடகா, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, பிஹார் ஆகிய நான்கு முக்கிய மாநிலங்களில் நடைபெற்ற 28 சட்ட மேலவைத் (எம்எல்சி) தேர்தல்களில், காகித வாக்குச்சீட்டு (பேலட் பேப்பர்) முறையில் தேர்தல் நடந்தும் கூட ஆளும் மற்றும் எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸால் ஒரு இடத்தில்கூட வெற்றி பெற முடியவில்லை; அனைத்து மாநிலங்களிலும் அக்கட்சி ‘பூஜ்ஜியம்’ பெற்றுள்ளது. இந்த நான்கு மாநிலங்களிலும் காங்கிரஸ் ஒரு இடத்தில்கூட வெல்ல முடியாமல் முற்றிலுமாகத் துடைத்தெறியப்பட்டுள்ளது.

தேர்தலில் எப்போதெல்லாம் தோல்வியடைகிறதோ, அப்போதெல்லாம் தங்கள் நிர்வாகத் திறனின்மையை மறைப்பதற்காக "இவிஎம் இயந்திரங்களில் முறைகேடு நடக்கிறது; மீண்டும் வாக்குச்சீட்டு முறை வேண்டும்" என்று ராகுல் காந்தி முதல் கார்கே வரை ஒப்பாரி வைப்பது காங்கிரஸின் வழக்கமான வாடிக்கை.

ஆனால், கர்நாடகாவில் ஆட்சி பலம் கையில் இருந்தும், உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் சமுதாயத்தின் வழிகாட்டிகளான ஆசிரியர்களும், படித்த பட்டதாரிகளும் நேரடியாக வாக்குச்சீட்டு மூலமாகவே வாக்களித்தும் காங்கிரஸுக்கு ஒரு இடம் கூடக் கிடைக்கவில்லை. இதன் மூலம், தோல்விகளை மறைக்கக் காங்கிரஸ் இத்தனை காலம் கட்டியெழுப்பிய போலி இவிஎம் அவதூறுகளும் நாடகங்களும் மக்கள் மன்றத்தில் சுக்குநூறாக உடைந்து தவிடுபொடியாகியுள்ளன.

பிரச்சினை வாக்குப்பதிவு இயந்திரங்களில் இல்லை; காங்கிரஸின் மக்கள் விரோதக் கொள்கைகள், தேச விரோத நடவடிக்கைகளால்தான் என்பதை இந்தத் தேர்தல்களில் மக்கள் தெளிவாக உணர்த்தியுள்ளனர். இனியாவது அரசியலமைப்பு அமைப்பான தேர்தல் ஆணையத்தின் மீதும், இவிஎம் தொழில்நுட்பத்தின் மீதும் வீண்பழி சுமத்துவதை நிறுத்திவிட்டு, மக்கள் தங்களை ஒட்டுமொத்தமாக நிராகரித்துவிட்டார்கள் என்ற உண்மையைக் காங்கிரஸ் ஏற்றுக்கொண்டு சுயபரிசோதனை செய்ய வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p> நயினார் நாகேந்திரன்</p></div>
“தவெக ஆட்சியில் சிறுமி முதல் மூதாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை” - செல்லூர் ராஜு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in