“தவெக ஆட்சியில் சிறுமி முதல் மூதாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை” - செல்லூர் ராஜு

 செல்லூர் ராஜு

செல்லூர் ராஜு

கோப்புப் படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

Updated on: 
1 min read

மதுரை: ‘‘சிறுமி முதல் மூதாட்டி வரை யாருக்கும் தவெக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை,’’ என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார்.

மதுரை மாநகர அதிமுக கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தகுதி இல்லாதவர்கள்தான் விஜய் அமைச்சரவையில் இருக்கிறார்கள். புகழ் என்பது ஒரு நீர்க்குமிழி போல. நீர்க்குமிழி எழும்பும்போது பெரிசாகத்தான் தெரியும், பின் அப்படியே அமிழ்ந்துவிடும். அரசியலுக்கு நடிகர்கள் வருவதும் இதுபோன்றதுதான். எம்ஜிஆர் மட்டுமே அதில் விதிவிலக்கானவர். அவரைப்போல் இனி யாரும் பிறக்கப் போவதில்லை. எத்தனை நடிகர்கள் வந்தாலும் அவர்போல் ஆக முடியாது.

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம், ஆட்சிக்கு வரலாம். அதைப் பற்றி விமர்சனம் இல்லை. தனுஷ், சிவகார்த்திகேயன் அரசியலுக்கு வரலாம். நல்லதுதான். அவர்களைப் பார்த்து தவெகவினர்தான் பயப்படுகின்றனர். எங்களுக்கு பயமில்லை.

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸை எப்போதோ கைது செய்திருக்க வேண்டும். தற்போது பல்வேறு அரசியல் நெருக்கடிகள், குறைபாடுகளால் தவெக அரசு மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதனை மறைக்கவே, அவரை கைது செய்துள்ளனர். 

மீனாட்சி அம்மன் கோயில் காலண்டர் டெண்டர் விட்டு ரத்து செய்துள்ளனர். கடந்த ஆட்சியில் ஒரு காலண்டர் ரூ.88 டெண்டர் விடப்பட்டது. தற்போது ரூ.59-க்கு டெண்டர் விட்டு ரத்து செய்துள்ளனர். இப்படி எல்லா துறையிலும் டெண்டர் அறிவித்து ரத்து செய்வதும் வாபஸ் வாங்குவதும் மறைமுக ஊழலுக்கு வழிவகுக்கிறது.

அதேபோல் மின்சார கொள்முதலில் ரூ.41.50-க்கு கொள்முதல் என விமர்சனம் ஆனவுடன் ரத்து செய்துவிட்டனர்.

இந்த ஆட்சியில் பாட்டி முதல் பாப்பா வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை. முதல்வர் காதுக்கு எதுவும் எட்டுவதில்லை. காவல் துறை முதல்வர் கட்டுப்பாட்டில் இல்லை.

அமைச்சர் நிர்மல் குமார் வகிக்கும் துறையில் நிர்வாகச் சீர்கேடுகள் உள்ளன. உதாரணத்துக்கு அவரது துறைக்குட்பட்ட தேனி மாவட்ட சிறையிலிருந்து 17 பேர் தப்பிவிட்டனர். அவர் அவரது துறையை விட்டு வெறும் அரசியல் வசனம் மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்” என்று அவர் தெரிவித்தார். 

<div class="paragraphs"><p> செல்லூர் ராஜு  </p></div>
தேனி சிறை சம்பவ நிலவரம்: எஞ்சிய கைதிகளை சுட்டுப் பிடிக்க தென்மண்டல ஐஜி உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in