

கடலூர்: மேகேதாட்டு அணை கட்ட முயற்சிப்பதில் காங்கிரஸும், பாரதிய ஜனதா கட்சியும் தமிழகத்திற்கு எதிராக கூட்டு சதியில் ஈடுபடுகிறது,” என தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.
கடலூரில் செய்தியார்களை சந்தித்த பி.ஆர்.பாண்டியன், “காவிரியின் குறுக்கே நடுவர் மன்ற இறுதி தீர்ப்புக்கு முரணாக உச்ச நீதிமன்றம், நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை ஏற்றுக்கொண்டு மத்திய அரசிதழில் வெளியிட்டு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டு காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேகேதாட்டுவில் அணை கட்ட காங்கிரஸை சேர்ந்த கர்நாடகா முதல்வர் சிவக்குமார் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். இது வன்மையாக கண்டிக்க தக்கதது.
மாநிலங்களவையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிப்பது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த மத்திய ஜல்சக்தி துறை இணை அமைச்சர் ராஜ்பூஷன் சவுத்ரி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் 18வது அட்டவணையில் எந்த இடத்திலும் தமிழக அரசிடம் அனுமதி கேட்க வேண்டியது இல்லை என்றிருப்பதாக உண்மைக்கு புறம்பான பதிலை தெரிவித்துள்ளார்.
இதே கேள்விக்கு 2015ல் அன்றைய ஜல்சக்தி துறை அமைச்சராக இருந்த உமாபாரதி, தமிழகம், புதுச்சேரி ஒப்புதல் இல்லாமல் அணை கட்ட முடியாது என தெரிவித்துள்ளார். 2021ல் கர்நாடக மாநில பாரதிய ஜனதா முதல்வர் பசவராஜ் பொம்மை, வரைவு திட்ட அறிக்கை தயாரித்து மாநில சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் ரூ.9 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் கொடுத்தார்.
காவிரியில் அணை கட்டுவதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை, காவிரி மேலாண்மை ஆணையத்திடம் முறையிடுங்கள் என மத்திய நீர்வள ஆணையம் தெரிவித்தது. அன்றைக்கு காவிரி மேலாண்மை வாரியம் அணை விவகாரத்தை விவாதத்திற்கு எடுத்தபோது, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மூன்று மாநிலங்களும் எதிர்ப்பு தெரிவித்ததால் அதை விவாதிக்காமலேயே வரைவு திட்ட அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திற்கு திருப்ப அனுப்பியது.
இப்படி சட்டப்படியான நடவடிக்கை தொடர்ந்து கொண்டிருக்கும்போது, மத்திய இணையமைச்சர் தெரிவித்த கருத்து, காங்கிரஸ் பாரதிய ஜனதா கூட்டுசதியில் ஈடுபடுவதை வெளிப்படுத்துகிறது. தமிழ்நாட்டில் மக்களை அகதிகளாக்க, விவசாயத்தை அழிப்பதற்கு காங்கிரஸும், பாரதிய ஜனதா கட்சியும் கூட்டுசேர்ந்து சதி செயலில் ஈடுபடுவதே ராஜ்பூஷன் சவுத்ரியின் பதிலாக இருக்கிறது.
அன்றைய தினமே கர்நாடக முதல்வர் சிவக்குமார், கர்நாடக மத்திய அமைச்சர்கள் மற்றும் அனைத்துக்கட்சி எம்.பிக்களுடன் அணை குறித்து ஆலோசனையில் ஈடுபடுகின்றார்.
இந்த நடவடிக்கைகள் அனைத்துமே காங்கிரஸும், பாரதிய ஜனதா கட்சியும் கூட்டுசேர்ந்து தமிழகத்தை அழிப்பதற்கு துணிந்துவிட்டார்கள் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறது. தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற்றிருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைமை தமிழ்நாட்டிற்கு எதிரான சதிக்கு துணை போகும் நிலையில் முதல்வர் ஜோசப் விஜய், வாய் திறக்காமல் இருப்பது தமிழக விவசாயிகளுக்கு அச்சத்தை உருவாக்கியிருக்கிறது.
முதல்வர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். அவசரகால நடவடிக்கையாக தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக்கட்சிகள், எம்.பிக்கள், விவசாய அமைப்புகள் கூட்டத்தை நடத்தி மத்திய அரசு, பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் சதிசெயலுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.