

மதுரை: தமிழக முதல்வர் விஜய் நடித்துள்ள, ’ஜனநாயகன்’ திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள அவதூறு காட்சிகளை நீக்கக்கோரி பாப்பாபட்டி கிராம மக்கள் சார்பில் தாக்கல் செய்த மனுவுக்கு பட தயாரிப்பாளர், இயக்குநர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவைச் சேர்ந்த பாப்பாபட்டி கிராம மக்கள் சார்பாக சின்னச்சாமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: முதல்வர் விஜய் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் ஜூலை 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இந்த படத்தின் தொடக்க மற்றும் முடிவுப் பகுதிகளில், உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கிராமத்தில் ஊராட்சி மன்றத் தேர்தல் நடைபெற்றது போலவும், அங்கு வாக்களிக்க முற்படுபவர்களின் கைகள் வெட்டப்படுவது போலவும், பள்ளிச் சிறுமிகள் மற்றும் பெண்கள் மீது வன்முறைத் தாக்குதல்கள் நடத்தப்படுவது போலவும் அப்பட்டமான பொய்யான காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளது.
பாப்பாபட்டி கிராம மக்கள் தங்களது உரிமைகளுக்காகவும், சட்டப் போராட்டங்களின் வழியிலும் போராடி வந்த வரலாற்றை மறைத்து, கிராமத்தை சாதி வெறி பிடித்த பகுதியாகவும், வன்முறை பூமியாகவும் தவறாக சித்தரித்துள்ளனர். இது கிராம மக்களின் கண்ணியத்திற்கும் நற்பெயருக்கும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாப்பாபட்டி கிராம மக்கள் அளித்த புகார்களை ஆய்வு செய்து, படத்தில் உள்ள அவதூறு மற்றும் வன்முறையைத் தூண்டும் காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும்.
ஆட்சேபனைக்குரிய காட்சிகள் முழுமையாக நீக்கப்படும் வரை திரைப்படத்தை திரையரங்குகளிலோ அல்லது பிற ஊடகங்களிலோ திரையிட இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். கிராமத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததற்காகப் படக்குழுவினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் சிவி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வித்யா சாகர் ஆஜராகி, கிராமத்தை சாதி வெறி பிடித்த பகுதியாகவும் வன்முறை பூமியாகவும் தவறாக சித்தரித்துள்ளது ஏற்புடையது அல்ல. எனவே அந்த காட்சிகளை நீக்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.
அரசு தரப்பில், “அது பாப்பாபட்டி அல்ல பாப்பம்பட்டி. இது அந்த கிராமம் அல்ல,” என தெரிவித்தனர். இதையடுத்து நீதிபதிகள், இதுதொடர்பாக படத்தின் தயாரிப்பாளர், பட இயக்குநர், தணிக்கை துறை அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 8ஆம் தேதி ஒத்தி வைத்தனர்.