

சென்னை: “தனிப்பெரும் கட்சியான தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்காததை கண்டித்து நாளை (மே 08) காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இது குறித்து காங்கிரஸ் மாவட்ட கமிட்டி தலைவர்களுக்கு அவர் எழுதிய கடிதம்: 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்கக் கூடாது என்ற நோக்கத்துடன் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்படும் மத்திய பாஜகவை கண்டித்தும், அவர்களின் கைப்பாவையாக செயல்படும் ஆளுநரை கண்டித்தும் மாவட்ட தலைநகரங்களில் நாளை வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாக மாபெரும் கண்டன் ஆர்ப்பாட்டம் நடத்திட தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அத்துடன் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாக அண்ணா சாலை, தாராப்பூர் டயர் அருகில் நாளை காலை 11 மணியளவில் எனது தலைமையில் கண்ட ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.