

சென்னை: பழநி கோயில் நில விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ் மீது அவதூறு பரப்பிய வழக்கில் கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் வினோத் சூர்யகுமாருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. மேலும் ‘ஜனநாயகத்தில் மாறுபட்ட கருத்துகள் மதிக்கப்பட வேண்டும்’ என நீதிபதி தனது உத்தரவில் கருத்து தெரிவித்துள்ளார்.
பழநி கோயில் நில விவகாரத்தில் இந்து அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் மீது சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய குற்றச்சாட்டின் கீழ், வினோத் சூர்யகுமாரை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர்.
பழநி கோயில் நில மோசடி விவகாரம் தொடர்பாக சமூக ஊடகங்களில் போலியான மற்றும் அவதூறான தகவல்களைப் பரப்பியதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரின் உதவியாளர் அளித்த புகாரின் அடிப்படையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொது அமைதியைக் குலைப்பது, கலவரத்தைத் தூண்டும் வகையில் செயல்படுவது போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வினோத் சூர்யகுமார் வழக்கு தொடர்ந்திருந்தார். அரசியல் உள்நோக்கத்துடன் தொடரப்பட்ட வழக்கு என்றும், பேச்சுரிமை கருத்தரிமை சுதந்திரத்துக்கு எதிரானது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஏ.சரவணன் ஆஜராகி, “மனுதாரர் பிரபல ஊடகவியலாளர். கோயில் நில நிர்வாக முறைகேடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதன் மூலம் பொது நலனுக்குப் பயன்படும் என்ற உண்மையான நம்பிக்கையின் பேரிலும், தகவல்களின் அடிப்படையிலும் அந்தப் பதிவுகள் வெளியிடப்பட்டன. அமைச்சர் மீது தனிப்பட்ட விரோதமோ அல்லது பழிவாங்கும் உணர்வோ இல்லை” என வாதிட்டார்.
காவல் துறை தரப்பில், “போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும். ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று வாதிடப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதி, “ஜனநாயகத்தில் மாறுபட்ட கருத்துகளின் குரல் மதிக்கப்பட வேண்டும். அரசையோ, அதன் அமைச்சர்களையோ வெறுமனே விமர்சிப்பது, அரசுக்கோ அல்லது பொது அமைதிக்கோ எதிரான குற்றமாகாது.
கோயிலுக்குச் சொந்தமான சொத்து, சொற்ப விலைக்கு விற்கப்பட்டது என்பதோ அல்லது அமைச்சரின் உறவினருக்கு இதில் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவதோ மதம், இனம், வசிப்பிடம், மொழி, சாதி அல்லது சமூகம் அல்லது சமூகங்களுக்கு இடையே பகை, வெறுப்பை உருவாக்க வாய்ப்புள்ளதாகவோ அல்லது ஊக்குவிப்பதாகவோ கூற முடியாது.
அவதூறான, தரக்குறைவான கருத்துகளைக் கூறுவது அல்லது தவறான தகவல்களை வெளியிடுவது, அதிகபட்சமாக பிஎன்எஸ் சட்டத்தின் பிரிவு 356-இன் கீழ் தண்டிக்கப்படக்கூடிய ஒரு குற்றத்தை மட்டுமே தவிர, அது ஒரு புலன் விசாரணைக்குரிய குற்றம் அல்ல” என்று கூறி, மனுதாரரை நிபந்தனை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டார்.
அதன்படி, மனுதாரர் தினமும் காலை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.