நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக் காலம் நீட்டிப்புக்கு எதிரான வழக்கை நிராகரிக்க ஐகோர்ட் மறுப்பு

நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக் காலம் நீட்டிப்புக்கு எதிரான வழக்கை நிராகரிக்க ஐகோர்ட் மறுப்பு
Updated on
1 min read

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக் காலத்தை மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டித்ததை எதிர்த்த வழக்கை நிராகரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

தென்னிந்திய நடிகர் சங்க சட்ட விதிகளின்படி, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட வேண்டும். கடந்த 2022-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தலைவராக நாசர், பொதுச் செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2025-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவர்களின் பதவிக் காலம் முடிவடைந்துவிட்டது.

இந்த நிலையில், நிர்வாகிகள் பதவிக் காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து, 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தை செல்லாது என்று அறிவிக்கக் கோரியும், உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியை ஆணையராக நியமித்து தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டுமென்றும், அதுவரை தற்போதைய நிர்வாக குழு மற்றும் செயற் குழு ஆகியவை முடிவுகள் எடுக்க தடை விதிக்க வேண்டும் என்றும் சங்கத்தின் உறுப்பினர் நம்பிராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

சங்க நிர்வாகிகளின் பதவிக் காலத்தை மேலும் மூன்றாண்டுகளுக்கு நீட்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, ஏற்று சங்கங்களின் பதிவாளர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக, நடிகர் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், நிர்வாகிகள் பதவிக் காலத்தை நீட்டித்த தீர்மானத்தை எதிர்த்து நம்பிராஜன் தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்கக் கோரி, சங்க உறுப்பினர் எஸ்.ஆர்.சேகர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி மரியா கிளாட், நிர்வாகிகள் பதவிக் காலத்தை நீட்டித்ததை எதிர்த்த வழக்கை நிராகரிக்க மறுத்து, எஸ்.ஆர்.சேகரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக் காலம் நீட்டிப்புக்கு எதிரான வழக்கை நிராகரிக்க ஐகோர்ட் மறுப்பு
குதிரை பேரத்தில் ஈடுபடும் முதல்வர் விஜய் மீது நடவடிக்கை தேவை: ஆளுநருக்கு திமுக கடிதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in