வறட்சி பாதிப்பை ஆய்வு செய்து நிவாரணம் வழங்க தருமபுரி விவசாயிகள் கோரிக்கை

பிரதிநிதித்துவப் படம்

பிரதிநிதித்துவப் படம்

Updated on: 
1 min read

அரூர்: தருமபுரி மாவட்டத்தில் வறட்சி பாதிப்பு குறித்து முழுமையாக ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தருமபுரி மாவட்டத்தில் பருவநிலை மாற்றம், எல் நினோ பாதிப்பு உள்ளிட்டவற்றால் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதனால் விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வங்கிகள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களில் பெற்றுள்ள பயிர்க்கடன்களின் அசல் மற்றும் வட்டித் தொகையை ஓராண்டு காலத்திற்கு ஒத்திவைத்து கடன் திருப்பிச் செலுத்தும் காலத்தை நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், வறட்சி மற்றும் பயிர்ச் சேதம் குறித்து கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் உதயகுமார், சுரேஷ் மற்றும் பல்வேறு விவசாய சங்க நிர்வாகிகள் கூறியதாவது: தருமபுரி மாவட்டம் முழுவதும் கடந்த சில ஆண்டு களாகப் பருவநிலை மாற்றம், போதிய மழையின்மை, சீரற்ற மழைப் பொழிவு உள்ளிட்ட காரணங் களால் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பருவமழை உரிய காலத்தில் கிடைக்காததால் பயிர்கள் வளர்ச்சியடையாமல் காய்ந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் நீராதாரங்களில் நீர்மட்டம் குறைந்து, விவசாயப் பணிகளைத் தொடர முடியாத சூழல் நிலவுகிறது.

விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள், உழவு கூலி மற்றும் பாசனச் செலவுகளுக்காக வங்கிகள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களில் விவசாயிகள் கடன் பெற்றுள்ளனர். ஆனால், இயற்கையின் பாதிப்பால் எதிர்பார்த்த மகசூல் கிடைக்காமல் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.

தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்பு ஒரு பருவத்திற்கான பாதிப்பு மட்டுமல்ல. தொடர்ந்து நிலவும் வறட்சியின் தாக்கத்திலிருந்து மீண்டு வருவதற்கே ஓராண்டுக்கும் மேலாகும் சூழல் உள்ளது.

தருமபுரி மாவட்டத்தின் வறட்சி நிலை குறித்தும், பயிர் சேதம் குறித்தும் கணக்கெடுப்பு நடக்கும் நிலையில் உண்மையான நிலவரத்தை முழுமையாக ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் கிடைக்கச் செய்ய வேண்டும்.

விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களில் பெற்றுள்ள பயிர்க்கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு ஓராண்டு கால அவகாசம் வழங்க வேண்டும்.

அனைத்து கிராமங்களிலும் நேரடியாக ஆய்வு செய்து மழையின்மை நிலத்தடி நீர்மட்டம் சரிவு, பயிர் காய்தல், மகசூல் இழப்பு மற்றும் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்புகளை முறையாகக் கணக்கெடுக்க வேண்டும்.

மேலும், வறட்சியால் கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி மற்றும் விவசாயத்தைச் சார்ந்த தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

எனவே, கால் நடைகளுக்குத் தேவையான தீவனம், குடிநீர் மற்றும் விவசாயக் குடும்பங் களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க உரிய நிவாரணத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு கூறினர்.

<div class="paragraphs"><p>பிரதிநிதித்துவப் படம்</p></div>
மனைவி அன்னாவை பிரிகிறார் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்

X