

சென்னை: வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்திய, காவலர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் சட்டம் - ஒழுங்கு பிரிவில் காவலர்களாக பணியாற்றி வருபவர்கள் சதீஷ்குமார் (32), அக்பர் (38).
இருவரும் நேற்று முன்தினம் இரவு பைக்கில் அண்ணா சாலை மீரான் சாகிப் தெரு வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது காவலர் சதீஷ்குமார் திடீரென பிரேக் பிடித்ததால் பைக் நிலைதடுமாறி முன்னால் தோழியுடன் சென்று கொண்டிருந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கிரிதரன் (25) பைக் மீது மோதியுள்ளது.
இதில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை கிரிதரன் செல்போனில் படம் பிடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த போலீஸார் இருவரும் கிரிதரனை சரமாரியாக தாக்கியதோடு, போனையும் பிடுங்கி உடைத்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த 20-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் சம்பவ இடத்தில் திரண்டதால் பதற்றமான சூழல் நிலவியது.
அறிக்கை அளிக்க உத்தரவு
இதைக் கேள்விப்பட்டு இரவு ரோந்து பணியிலிருந்த மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் சீனிவாசன் சம்பவ இடம் விரைந்து இரு தரப்பினரையும் சமாதானம் செய்தார்.
தாக்குதல் மற்றும் தகராறு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து, வழக்கறிஞர் கிரிதரன், அவருக்கு ஆதரவாக வந்த வழக்கறிஞர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
தகராறில் ஈடுபட்ட காவலர்கள் இருவரும் மது போதையில் இருந்ததாகவும், அவர்கள் ஓட்டி வந்த பைக்கின் நம்பர் பிளேட் எண் சரியாக இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குற்றச்சாட்டுக்கு உள்ளான போலீஸார் குறித்து விரைந்து விசாரித்து அறிக்கை அளிக்க உயர் போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதை அடிப்படையாக வைத்து சம்பந்தப்பட்ட போலீஸார் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.