

சென்னை: நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த முன்னாள் கடற்படை அதிகாரி ஒருவரது 12 வயது மகள் கோட்டூர்புரத்தைச் சேர்ந்த பரதநாட்டியக் கலைஞரிடம் மாலை நேர பரதநாட்டிய வகுப்புக்கு சென்று வந்தார்.
கடந்த 8 மாதமாக சிறுமி பரதநாட்டியம் கற்று வருகிறார். வழக்கம்போல் கடந்த 28-ம் தேதி மாலையும் வகுப்புக்குச் சென்றுள்ளார். அப்போது நடனக் கலைஞரின் கணவர், சிறுமியை தனியாக அழைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
அதிர்ச்சி அடைந்த சிறுமி வீடு திரும்பியதும் இது தொடர்பாக பெற்றோரிடம் அழுதபடி தெரிவித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இது தொடர்பாக கோட்டூர்புரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
அதன்படி, போலீஸார் விசாரித்தனர். இதில் பரதநாட்டியக் கலைஞரின் கணவர் சிறுமியிடம் அத்துமீறியது தெரியவந்தது.
இதையடுத்து அவர் மீது போக்சோ உட்பட மேலும் சில பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து பரதநாட்டியக் கலைஞரின் கணவரை கைது செய்தனர்.
இவர் தேனாம்பேட்டையில் உள்ள தலைமைக் கணக்காயர் அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி கடந்த பிப்ரவரி மாதம்தான் ஓய்வு பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.