

விருதுநகர்: ‘முதல்வர் விஜய் அறிவித்துள்ள பால் கொள்முதல் விலை உயர்வு போதாது. லிட்டருக்கு ரூ.10 உயர்த்த வேண்டும்’ என பால் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுவதாக இன்று நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் முதல்வர் விஜய் அறிவித்தார். அதன்படி கூட்டுறவு சங்கம் மூலம் வழங்கப்படும் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.1 உயர்த்தப்பட்டுள்ளது. ஆதாவது ரூ.35 ஆக இருந்த கொள்முதல் விலை தற்போது ரூ.36 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அரசு வழங்கும் ஊக்கத் தொகை ரூ.3-லிருந்து ரூ.5 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக ஒரு லிட்டர் பாலின் கொள்முதல் விலை ரூ.41 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து விருதுநகர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்க மாவட்டச் செயலாளர் பாலமுருகன் கூறுகையில், “விருதுநகர் மாவட்டத்தில் 101 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நாளொன்றுக்கு 10 ஆயிரம் லிட்டர் வரை ஆவின் நிர்வாகத்தால் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் உள்ளனர்.
இதுவரை பால் கொள்முதலில் லிட்டருக்கு ரூ.35 அரசு வழங்கி வந்தது. தற்போது கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு ரூ.41 வழங்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இதில், கொள்முதல் விலை ரூ.1 மட்டுமே உயர்த்தி வழங்கப்படும். ஊக்கத்தொகை என்பது அடிக்கடி வழங்கப்பட மாட்டாது. 3 அல்லது 4 மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படும். அவ்வாறு வழங்குவதால் பால் உற்பத்தியாளர்களுக்கு எந்தவித பயனும் இல்லை.
அதனால்தான், தனியாரிடம் பால் விற்பனை செய்கிறார்கள். தனியார் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ.50 வரை கொள்முதல் விலை கொடுக்கிறார்கள். ஊக்கத் தொகையும் 2 அல்லது 3 நாட்களுக்கள் வழங்குகின்றனர்.
இதனால் அதிகமான பால் உற்பத்தியாளர்கள் ஆவின் நிர்வாகத்திடம் பால் கொடுக்காமல் தனியாருக்கு விற்பனை செய்கிறார்கள். அரசு அறிவித்துள்ள இந்த பால் கொள்முதல் விலை உயர்வு போதாது. லிட்டருக்கு ரூ.10 உயர்த்தினால் மட்டுமே பால் உற்பத்தியாளர்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கும்” என்று கூறினார்.