“டி.கே.சிவக்குமாரிடம் நல்ல பண்பு இல்லை” - கே.வி.தங்கபாலு விமர்சனம்

“டி.கே.சிவக்குமாரிடம் நல்ல பண்பு இல்லை” - கே.வி.தங்கபாலு விமர்சனம்
Updated on
1 min read

சென்னை: “கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், ‘எங்கள் மாநிலத்தில் நடப்பது குறித்து பிற மாநிலத்தினர் கேட்கக் கூடாது’ என கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. இது நல்ல பண்பாகப் பார்க்கப் படாது” என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் கே.வி. தங்கபாலு தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் சத்தியமூர்த்தியின் 150-வது பிறந்தநாள் விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இதையொட்டி, கே.வி.தங்கபாலு தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் சத்தியமூர்த்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் கே.வி. தங்கபாலு கூறியது: “சுதந்திரப் போராட்டத் தியாகி, முன்னாள் காங்கிரஸ் தலைவர் என பல்வேறு சிறப்புகளை கொண்டவர் சத்தியமூர்த்தி. அவர் பெருந்தலைவர் காமராஜரின் வழிகாட்டியாகவும் திகழ்ந்தார். அவரைப் போன்ற தலைவர்கள் இனி பிறப்பார்களா என்பது தெரியவில்லை.

தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் அமைச்சர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். காமராஜரின் புகழையும், வழிகாட்டுதலையும் பின்பற்றும் அரசாக தற்போதைய தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் லஞ்சம், ஊழல் இல்லாத நிலையை உருவாக்க முதல்வர் மேற்கொண்டு வரும் முயற்சிகளை நாங்கள் பெருமையுடன் பார்க்கிறோம். கர்நாடகாவில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை தமிழக காங்கிரஸ் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

அந்த மாநில முதல்வர் டி.கே. சிவக்குமார், “எங்கள் மாநிலத்தில் நடப்பது குறித்து பிற மாநிலத்தினர் கேட்கக் கூடாது” என தெரிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. இது நல்ல பண்பாகப் பார்க்கப்படாது. அவரது கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. கர்நாடகத்தைச் சேர்ந்த மக்களும் தமிழகத்தில் வசித்து வருகின்றனர். எனவே, இரு மாநில மக்களும் சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும். இதை கர்நாடக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

நீட் தேர்வை காங்கிரஸ் கட்சி கொண்டுவரவில்லை. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத்தான் செயல்படுத்தியது. நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டில் ராகுல் காந்தி உறுதியாக இருக்கிறார். நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும். ராகுல் காந்தி பிரதமராக வரும்போது நீட் தேர்வு ஒழிக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

“டி.கே.சிவக்குமாரிடம் நல்ல பண்பு இல்லை” - கே.வி.தங்கபாலு விமர்சனம்
“பாசிச அரசியலைத் தொடங்​க ஆழம் பார்க்கிறதா தவெக அரசு?” - கனிமொழி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in