

சென்னை: நதிநீர் இணைப்பு, பங்கீடு குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து ஆலோசிப்பதற்காக, முதல்வர் விஜய் இன்று (அக்.13) விஜயவாடா செல்கிறார்.
சென்னையின் குடிநீர் தேவைக்காக, தெலுங்கு கங்கை திட்டத்தின்கீழ் ஆந்திரா ஆண்டுதோறும் 12 டிஎம்சி கிருஷ்ணா நதி நீரை தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும். எனினும், இந்தாண்டு அக்.9-ம் தேதி வரை தமிழகத்துக்கு 2.25 டிஎம்சி தண்ணீர் மட்டுமே கிடைத்துள்ளது.
இதனுடன் ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்குள் வரும் ஆறுகளில் அணை கட்டவும் அந்த மாநில அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதனால் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நதிநீர் பங்கீட்டில் சிக்கல் எழுந்துள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும், நதிநீர் இணைப்பு குறித்து ஆலோசனை நடத்தவும் முதல்வர் விஜய், இன்று தனி விமானம் மூலம் விஜயாவாடா செல்கிறார்.
அங்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோரை விஜய் சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின்போது கோதாவரி - கிருஷ்ணா - காவிரி நதிநீர் இணைப்புத் திட்டம் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட உள்ளதாக அரசு வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்தச் சந்திப்பு முடிந்தபின்பு முதல்வர் விஜய் மாலை 6 மணிக்கு விஜயவாடாவில் உள்ள கனக துர்கா கோயிலுக்குச் சென்று தரிசனம் மேற்கொள்கிறார். அதன்பின் இரவு 8.30 மணிக்கு விஜயவாடாவில் இருந்து புறப்பட்டு சென்னை வந்தடைகிறார்.
இதற்கிடையே கிருஷ்ணா நதிநீர் தொடர்பாக 2017 பிப்ரவரியில் அப்போதைய தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து தண்ணீர் திறக்க வலியுறுத்தினார்.
நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு நதிநீர் விவகாரம் குறித்து 2 மாநில முதல்வர்களிடையே நடைபெறும் முக்கிய சந்திப்பாக இது அமையவுள்ளது.முன்னதாக காவிரி நதிநீர் விவகாரம் குறித்து முதல்வர் விஜய் கடந்த ஆகஸ்ட் மாதம் கர்நாடகா செல்ல திட்டமிட்டார்.
காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்புகள் தீவிர போராட்டம் நடத்தி வந்ததால், தற்போதைக்கு கர்நாடகாவுக்கு வரவேண்டாம் என்று அந்த மாநில முதல்வர் சிவக்குமார், விஜய்க்கு கோரிக்கை வைத்தார். இதையடுத்து முதல்வர் விஜய்யின் கர்நாடக பயணம் ரத்தானது குறிப்பிடத்தக்கது.
பெரியார் அறிவுலகம்
கோவையில் ரூ.300 கோடியில் ‘பெரியார் அறிவுலகம்’ எனும் நவீன நூலகத்தை முதல்வர் விஜய் அக்.16-ம் தேதி திறந்து வைக்கவுள்ளார்.
இதற்காக வெள்ளிக்கிழமை காலை கோவை விமான நிலையம் வந்தடையும் அவர், அங்கிருந்து நேரடியாக விழா நடைபெறும் இடத்துக்குச் செல்கிறார். தொடர்ந்து நூலகத்தை திறந்து வைத்து பேச உள்ளார்.