

புதுச்சேரி: “விரல் நுனியில் முதல்வர் விஜய் விவரங்களை வைத்துக் கொண்டு பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறார்” என தமிழக சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் இன்று புதுச்சேரி வந்தார். முத்தியால்பேட்டையில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “என்னுடைய நெருங்கிய உறவினர் தெரசா பெனடிக், கன்னியாஸ்திரிகளுக்கான கர்மேல் மடத்தில் 25 ஆண்டுகள் நிறைவு செய்வதையொட்டி வெள்ளி விழா நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள இங்கு வந்துள்ளேன்.
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அறுதி பெரும்பான்மை பெற்று இருக்கும் ஓர் அரசு நீடிக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். எம்எல்ஏக்களின் விருப்பமும் அதுதான். அதன்படி ஆட்சி தொடரும்” என்றார்.
அப்போது, கோவை சிறுமி கொலை உள்ளிட்ட குற்றச் சம்பவங்களால் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஜே.சி.டி.பிரபாகர், “ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்துள்ள முதல்வர் விஜய், விரல் நுனியில் விவரங்களை வைத்து வைத்துக்கொண்டு பல்வேறு திட்டங்களையும், பல்வேறு சீரிய முயற்சிகளையும் மேற்கொள்வதை நாம் அன்றாடம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவருக்கு ஒத்துழைப்பு அளிப்பதும் நல்வாழ்த்துகள் கூறுவதும் நமது கடமை” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, விமான நிலையத்துக்கு தமிழக அரசு நிலம் வழங்க வேண்டும் என்று புதுச்சேரி அரசு கேட்டு வருவது குறித்த கேள்விக்கு, “இது தொடர்பான விவரங்கள் எனக்கு தெரிவிக்கப்படவில்லை. உரிய நேரத்தில் விவரங்கள் தெரிவிக்கப்பட்டால், அரசின் கவனத்துக்கு அதனைக் கொண்டு வர கடமைப்பட்டிருக்கிறேன்” என்று தெரிவித்தார்.