“கோலி உடன் விளையாடுவது எனது ஆட்டத்தை மேம்படுத்துகிறது” - ஐபிஎல் அனுபவம் பகிரும் படிக்கல்

தேவ்தத் படிக்கல் மற்றும் விராட் கோலி

தேவ்தத் படிக்கல் மற்றும் விராட் கோலி

Updated on
2 min read

மும்பை: ஆர்சிபி அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான தேவ்தத் படிக்கல், தனது ஐபிஎல் கிரிக்கெட் அனுபவத்தை ஜியோஸ்டார் உடன் பகிர்ந்துள்ளார்.

இதில் ஐபிஎல் கிரிக்கெட் அறிமுகம் முதல் கோலி உடன் இணைந்து விளையாடுவது, ஆர்சிபி தவிர்த்து ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி உடனான தனது பயணத்தையும் அவர் கூறியுள்ளார்.

“ஐபிஎல் கிரிக்கெட்டில் கடந்த 2020 சீசனில்தான் நான் அறிமுகமானேன். உள்ளூர் கிரிக்கெட்டில் ரன் சேர்த்த அனுபவம் ஐபிஎல் களத்தில் எனக்கு கைகொடுக்கும் என நான் நம்பிக்கை கொண்டிருந்தேன். எனக்கான வாய்ப்பு வரும் போது நூறு சதவீத ஆட்டத்திறனை வெளிப்படுத்த வேண்டுமென முடிவு செய்தேன்.

கிரிக்கெட் விளையாட்டின் சிறந்த வீரரான விராட் கோலி உடன் இணைந்து பேட் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் இன்னிங்ஸை எப்படி கட்டமைக்க வேண்டுமென அறிந்தேன். அது எனது வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது. அவரோடு விளையாடுவது எனது ஆட்டத்தை மேம்படுத்துகிறது.

அதன் பின்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் பயணித்தேன். தொடக்க ஆட்டக்காரராக இருந்த நான், பேட்டிங் ஆர்டரில் பல்வேறு இடங்களில் இந்த அணிகளுக்காக மாறி மாறி விளையாடினேன். அந்த அனுபவங்கள் எனது கரியரை கச்சிதமாக வடிவமைத்தது. ஆட்டத்தில் பல்வேறு சூழலுக்கு ஏற்ப எப்படி நமது இன்னிங்ஸை அணுக வேண்டுமென அறிய அது உதவியது. 2024 சீசன் சவாலானதாக இருந்தது. அந்த சீசன் முடிந்ததும் நான் எதில் கவனம் செலுத்த வேண்டி உள்ளது என்பதில் உறுதியாக இருந்தேன். அதற்கான முயற்சியை முன்னெடுத்தேன். கிரிக்கெட் வீரர்களின் பயணத்தில் இந்த மாதிரியான பின்னடைவுகள் இருக்கும். அதை எப்படி கடக்கிறோம் என்பதுதான் முக்கியம் என நான் கருதுகிறேன்.

மீண்டும் ஆர்சிபி அணிக்கு திரும்பியதும் எனது பேட்டிங் டெக்னிக்கில் நிறைய மாற்றங்கள் செய்தேன். பயிற்சியாளர் ஆண்டி பிளவர், தினேஷ் கார்த்திக் ஆகியோர் இதற்கு உறுதுணையாக இருந்தனர். சிவப்பு பந்து (டெஸ்ட் பார்மெட்) கிரிக்கெட் மற்றும் வெள்ளைப்பந்து (ஷார்டர் பார்மெட்) கிரிக்கெட் என இரண்டுக்கும் ஆட்ட நுணுக்கம் மாறுபடும். அதில் கவனம் செலுத்தினேன். அதற்கான பலனை பெற்று வருகிறேன். ஆர்சிபி அணியின் வலுவான பேட்டிங் வரிசை கொடுக்கும் நம்பிக்கை காரணமாக என்னால் கேஷுவலாக விளையாட முடிகிறது.

டி20 கிரிக்கெட் இப்போது மாறியுள்ளது. அணிக்கு 20 முதல் 30 ரன்கள் கூடுதலாக கிடைக்கும் என்றால் ஒரு பேட்ஸ்மேன் தனது விக்கெட்டை விட்டுக்கொடுக்க தயங்க கூடாது என கருதுகிறேன். வைபவ் சூர்யவன்ஷி மாதிரியான வீரர் மிகவும் ஸ்பெஷல். இந்த வயதில் அவரது பவர், அதிரடி பேட்டிங் என்னை ஈர்க்கிறது. அவர் தனித்துவ திறன் கொண்ட வீரர்” என தெரிவித்தார்.

25 வயதான தேவ்தத் படிக்கல், கடந்த 2020-ம் ஆண்டு சீசன் முதல் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். முதல் இரண்டு சீசன்கள் ஆர்சிபி அணிக்காக விளையாடினார். அதன் பின்னர் 2022 மற்றும் 2023 சீசனை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவும், 2024 சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காகவும் விளையாடினார். கடந்த 2025 சீசன் முதல் ஆர்சிபி அணிக்காக மீண்டும் விளையாடி வருகிறார். 2020 சீசனில் வளர்ந்து வரும் வீரருக்கான விருதை (எமர்ஜிங் பிளேயர்) அவர் வென்றார்.

88 ஐபில் ஆட்டங்களில் விளையாடி உள்ள அவர், 2239 ரன்களை எடுத்துள்ளார். அதிகபட்சமாக ஒரே இன்னிங்ஸில் 101 ரன்கள் எடுத்துள்ளார். இதுவரை 234 ஃபோர்கள் மற்றும் 80 சிக்ஸர்களை அவர் விளாசி உள்ளார். அவரது பேட்டிங் சராசரி 26.98. நடப்பு சீசனில் இது 36.08 என உள்ளது. இந்த சீசனில் 14 ஆட்டங்களில் விளையாடி 433 ரன்கள் சேர்த்துள்ளார்.

<div class="paragraphs"><p>தேவ்தத் படிக்கல் மற்றும் விராட் கோலி</p></div>
டிராவிஸ் ஹெட் உடன் கைகுலுக்க மறுத்த விராட் கோலி: காரணம் என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in