மக்களின் அடிப்படை வசதிகளுக்கு கூடுதல் கவனம்: ஐஏஎஸ், ஐபிஎஸ் அலுவலர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தல்

மக்களின் அடிப்படை வசதிகளுக்கு கூடுதல் கவனம்: ஐஏஎஸ், ஐபிஎஸ் அலுவலர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தல்
Updated on
2 min read

சென்னை: பொது மக்களுக்கான கல்வி, குடிநீர், சுகாதாரம், மின்சாரம், போக்குவரத்து, ரேஷன் போன்ற அடிப்படை வசதிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று ஐஏஎஸ், ஐபிஎஸ் அலுவலர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் முதல் மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை மற்றும் வனத்துறை அலுவலர்களின் மாநாடு சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதற்கு முதல்வர் விஜய் தலைமை வகித்தார்.

இதில் அனைத்து துறைகளின் அமைச்சர்கள், செயலர்கள், மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில் மாவட்ட நிர்வாகம், சட்டம்- ஒழுங்கு நிலை உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நேர்மையாக செயல்பட வேண்டும் முதல்நாளில் முதல்வர் விஜய் தொடக்க உரையாற்றினார். தொடர்ந்து மதியம் மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு நடைபெற்றது. இறுதிநாளான நேற்று காலை காவல்துறை அதிகாரிகள் மாநாடும், மதியம் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் மாநாடும் நடந்தது.

இவ்விரு நாட்களும் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு, போதை ஒழிப்புக்கு எதிரான செயல்பாடுகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அதிகாரிகள் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் செயல்பட வேண்டும். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் தெரிவித்த கருத்துகளை முதல்வர் விஜய் குறிப்பெடுத்துக் கொண்டார். அதில் முக்கியமான சில குறைபாடுகளுக்கு விரைந்து தீர்வுகாண வேண்டுமென அங்கேயே தலைமைச் செயலருக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டார்.

இதையடுத்து பணிகளில் சிறந்து விளங்கிய அலுவலர்களை பாராட்டி விருது, கேடயங்களை முதல்வர் வழங்கினார். அதன்படி சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பாகப் பணியாற்றிய 2024-25-ம் ஆண்டுக்கான பசுமை விருதுகள் முன்னாள் மாவட்ட ஆட்சியர்கள் எம்.என்.பூங்கொடி (திண்டுக்கல்), த.பிரபுசங்கர் (திருவள்ளூர்), ஐ.எஸ்.மெர்சி ரம்யா (புதுக்கோட்டை) ஆகியோருக்கும், தமிழ் ஆட்சிமொழியை திறம்பட செயல்படுத்தியதற்காக 2023-ம் ஆண்டுக்கான விருது முன்னாள் மாவட்ட ஆட்சியர்கள் ஆஷா அஜித் (சிவகங்கை), பி.என். தர் (கன்னியாகுமரி) ஆகியோருக்கு வழங்கி கவுரவிக்கப் பட்டது.

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தமைக்கான விருதுகள் 2024-ம் ஆண்டுக்கு முன்னாள் விருதுநகர் ஆட்சியர் ஜெயசீலன், 2025-ம் ஆண்டுக்கு முன்னாள் மாவட்ட ஆட்சியர்கள் கே.சாந்தி (தருமபுரி), ஜெ.யு.சந்திரகலா (ராணிப்பேட்டை), பா.பிரியங்கா (தஞ்சாவூர்) ஆகியோருக்கு முதல்வர் விஜய் அளித்தார்.

முதல்வர் குறைதீர்ப்பு பிரிவில் வரப்பெற்ற மனுக்கள் மீது உரிய தீர்வு பெற்று தந்தமைக்கான 2025-26-ம் ஆண்டுக்கான சிறந்த ஆட்சியர் விருதை கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் ஆட்சியர் ரா.அழகு மீனாவுக்கும், குறைதீர்ப்பு பிரிவின் கீழ் வரப்பெற்ற மனுக்களுக்கு உரிய தீர்வு காணப்பட்டதற்காக சிறந்த போலீஸ் கமிஷனர் விருது, முன்னாள் ஆவடி கமிஷனர் சங்கருக்கும் அளிக்கப்பட்டது.

மருத்துவத்துறை சார்பில் அனைத்து 20 சுகாதார குறியீட்டு களையும் மிகவும் சிறப்பாக செயல்படுத்தியமைக்காக 2025–26-ம் ஆண்டுக்கான விருதுகள் முன்னாள் மாவட்ட ஆட்சியர்கள் எஸ்.சரவணன் (திண்டுக்கல்), பவன்குமார் கிரியப்பனவர் (கோவை), துர்கா மூர்த்தி (நாமக்கல்) ஆகியோருக்கும், குற்றங்களை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டதற்கான விருதுகள் முன்னாள் மாவட்ட எஸ்பிக்கள் வா.வெ.சாய் பிரணீத் (விழுப்புரம்), பெ.தங்கத்துரை (கிருஷ்ணகிரி), விஸ்வேஷ் பாலசுப்பிர மணியம் (அரியலுார்), ஆர்.ஸ்டாலின் (கன்னியாகுமரி) ஆகியோருக்கும் முதல்வர் விஜய் வழங்கினார்.

மக்களின் அடிப்படை வசதிகளுக்கு கூடுதல் கவனம்: ஐஏஎஸ், ஐபிஎஸ் அலுவலர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தல்
தவெக தோழமை கட்சிகள் இன்று ஆலோசனை கூட்டம்: முதல்வர் விஜய் தலைமையில் கோவளத்தில் நடக்கிறது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in