தவெக தோழமை கட்சிகள் இன்று ஆலோசனை கூட்டம்: முதல்வர் விஜய் தலைமையில் கோவளத்தில் நடக்கிறது

தவெக தோழமை கட்சிகள் இன்று ஆலோசனை கூட்டம்: முதல்வர் விஜய் தலைமையில் கோவளத்தில் நடக்கிறது
Updated on
1 min read

சென்னை: தவெக தோழமை கட்சிகள் ஆலோசனை கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் கோவளத் தில் இன்று நடைபெறுகிறது.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்த தவெக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட்கள் மற்றும் ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.

இந்நிலையில், தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தந்த தோழமை கட்சிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து விவாதிக்கவும், சென்னையை அடுத்த கோவளத்தில் தனியார் நட்சத்திர விடுதியில் இன்று (ஜூலை 1) மாலை 4 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

இக்கூட்டத்துக்கு தமிழக முதல்வர் விஜய் தலைமை தாங்குகிறார். அதன்படி, இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு தோழமை கட்சித் தலைவர்களை தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.

சமீபத்தில் திமுக கூட்டணியில் இருந்து விலகி, தவெக-வுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்த மதிமுக-வுக்கும் இந்த கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில், அரசியல் சூழலைப் பயன்படுத்தி தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றாக நிற்பது போன்ற திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்காது

இதற்கிடையே இக் கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கட்சி நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘‘தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவிக்கிறோம். எங்களுடைய ஆதரவு தொடரும்.

அதேநேரம் நாங்கள் கூட்டணியிலும் இல்லை; அமைச்சரவையிலும் இடம் பெறவில்லை. அதனால் தவெக நடத்தும் கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில் நாங்கள் பங்கேற்கவில்லை. இதுதொடர்பாக முதல்வரை இன்று காலை சந்தித்து நிர்வாகிகள் விளக்கமளிப்பர் ’’ என்று தெரிவித்தனர்.

தவெக தோழமை கட்சிகள் இன்று ஆலோசனை கூட்டம்: முதல்வர் விஜய் தலைமையில் கோவளத்தில் நடக்கிறது
ஜோதிட நாள்காட்டி 01.07.2026 | ஆனி 17 - புதன்கிழமை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in