

படம்: ம.பிரபு
சென்னை: சென்னையில் 130 ஏசி பேருந்துகள் உட்பட ரூ.290.08 கோடியில், 250 பேருந்துகள் இயக்கத்தை முதல்வர் விஜய் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில், மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில், ரூ.697 கோடி செலவில் 625 தாழ்தள மின்சாரப் பேருந்துகள் ஐந்து பணிமனைகள் மூலம் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.
இதைத்தொடர்ந்து, ரூ.1,337 கோடி மதிப்பிலான 750 புதிய தாழ்தள குளிர்சாதன மின்சாரப் பேருந்துகள் 7 பணிமனைகள் மூலம் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக ரூ.234.50 கோடி செலவில், 130 புதிய தாழ்தள குளிர்சாதன மின்சாரப் பேருந்துகளின் சேவையை முதல்வர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அத்துடன், குளிர்சாதனப் பேருந்தில் ஏறி, இயக்கம் குறித்து அமைச்சர், அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் ரூ.756 கோடி மதிப்பீட்டில் 1,614 புதிய பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இதில் முதற்கட்டமாக 6 அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் ரூ.55.58 கோடியில் 120 புதிய பேருந்துகளின் சேவையையும் முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்வில், அமைச்சர் ஆ.விஜய் தமிழன் பார்த்திபன், தலைமைச் செயலர் மு.சாய்குமார், போக்குவரத்துத் துறை செயலர் இல.நிர்மல்ராஜ், சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் த.மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
எந்த வழித்தடத்தில்...
சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் (MAA 1) வழித்தடத்தில் 5 பேருந்துகளும், சென்னை விமான நிலையம் - சிறுசேரி தொழில்நுட்ப பூங்கா (MAA 2) வழித்தடத்தில் 5 பேருந்துகளும், சென்னை விமான நிலையம் - அடையார் பேருந்து நிலையம் (MAA 3) வழித்தடத்தில் 5 பேருந்துகளும் இயக்கப்படும்.
இதுபோல் செங்குன்றம் - கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை (113) - 5, கோயம்பேடு - சிறுசேரி தொழில்நுட்ப பூங்கா (76V) - 5, அம்பத்தூர் தொழிற்பேட்டை - வேளச்சேரி (D70) - 8, பல்லாவரம் - செங்கல்பட்டு (500P) - 5, ஆலந்தூர் நீதிமன்றம் - சிறுசேரி தொழில்நுட்ப பூங்கா (570R) - 5, செங்குன்றம் - கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை (114R) - 5, பல்லாவரம் - மாமல்லபுரம் (515P) - 5, கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை - செம்மஞ்சேரி (119) - 5, கவியரசு கண்ணதாசன் நகர் - அண்ணா சதுக்கம் (2C) - 5 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
மேலும் திரு.வி.க. நகர் - கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை (170C) - 5, தியாகராயர் நகர் - ஏஜிஎஸ் அலுவலர் குடியிருப்பு (9M) - 5, கோயம்பேடு - கிளாம்பாக்கம் (70V) - 5, தாம்பரம் மேற்கு - சிறுசேரி தொழில்நுட்ப பூங்கா (105) - 4, தீவுத்திடல் -ஜெ.ஜெ.நகர் (7H) - 5, தீவுத்திடல் - கிளாம்பாக்கம் (PP21) - 5, பெரம்பூர் - அண்ணாசதுக்கம் (29A) - 5, அண்ணாசதுக்கம் - பட்டாபிராம் (40H) - 5, பாரிமுனை - குன்றத்தூர் (88Kct) - 5, சென்ட்ரல் - திருப்போரூர் (221) - 5, தியாக ராயர் நகர் - திருவேற்காடு (72) - 5, அண்ணாசதுக்கம் - பூந்தமல்லி (25) - 5 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.