

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு நேற்று தொடங்கியது.
சென்னை: சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகளில் அதிகாரிகள் சுதந்திரமாக முடிவு செய்யலாம். எதிலும் தனிநபர்கள் தலையீடு இருக்காது. யார் தவறு செய்தாலும் பாரபட்சமின்றி துரிதமாக நடவடிக்கை எடுத்து தண்டனை பெற்றுத் தரவேண்டும் என்று ஐஏஎஸ், ஐபிஎஸ் மாநாட்டில் முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு நிலவரம், அரசுத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆண்டுதோறும் முதல்வர் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அலுவலர்கள் மாநாடு நடைபெறும். அந்த வகையில், புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் முதலாவது மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை, வனத் துறை அலுவலர்களின் 2 நாள் மாநாடு சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று தொடங்கியது.
மாநாட்டுக்கு முதல்வர் விஜய் தலைமை வகித்தார். இதில் அனைத்து துறைகளின் அமைச்சர்கள், செயலர்கள், மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். மாவட்ட நிர்வாகம், சட்டம் - ஒழுங்கு நிலை உட்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாநாட்டில் முதல்வர் விஜய் பேசியதாவது: லஞ்சம், ஊழல் இல்லாத, வெளிப்படையான, நேர்மையான, சமூக நீதிக்கான ஆட்சிக்காக நமது அரசை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகளில் நீங்கள் சுதந்திரமாக முடிவு செய்யலாம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி சட்டப்படி துரிதமாக நடவடிக்கை எடுத்து உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும். அதேநேரம், நிரபராதிகள் பாதிக்கப்படக் கூடாது.
ஆட்சியர்கள் ஒவ்வொரு மாதமும் சட்டம் - ஒழுங்கு கூட்டத்தை நடத்தி, சம்பந்தப்பட்ட துறைகளை ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும். வருவாய் மற்றும் காவல் துறையினரோடு கலந்துபேசி, எந்த ஒரு நிகழ்வும் நடப்பதற்கு முன்னதாகவே மூலகாரணத்தை கண்டறிந்து, குற்றங்களை தடுக்க வேண்டும்.
பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை 100 சதவீதம் உறுதிசெய்ய வேண்டும். ஒவ்வொரு பள்ளிக்கும் அருகில் உள்ள கடைகளை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும். போதைப் பொருட்கள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோரை உடனே கைது செய்ய வேண்டும்.
ஆய்வுக்காக அரசு அலுவலகங்களுக்கு வரும் மாவட்ட அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். அரசுத் திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பதை அதிகாரிகள் நேரடியாக சென்று ஆய்வு செய்ய வேண்டும்.
அரசு அலுவலர்கள் சட்ட விதிகளுக்கு உட்பட்டு சுதந்திரமாக செயல்படலாம். எதிலும் தனிநபர்களின் தலையீடு இருக்காது. சாதி அடிப்படையிலான பாகுபாடு, வன்முறைகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில் திருவிழாக்கள், அரசியல் பேரணிகள், பொது நிகழ்வுகளில் நெரிசல் ஏற்படாமல் தடுக்க வேண்டும்.
ஊரகப் பகுதிகளில் நடைபெறும் பெரும்பாலான மோதல், கொலை சம்பவங்களுக்கு நிலத் தகராறுகளே முதன்மைக் காரணமாக உள்ளன. மாவட்ட அளவிலான நில வழக்கு தீர்வுக் குழு சீரமைக்கப்பட்டு 2 வார இடைவெளியில் கூட்ட வேண்டும். ஆட்சியர், எஸ்.பி.மாதம்தோறும் மதிப்பாய்வு நடத்தி, செயல் திறனை மதிப்பிட வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பற்ற பகுதிகள், குற்றம் அதிகரித்த இடங்கள், விபத்துகள் அதிகம் நிகழும் பாதைகள், மூத்த குடிமக்கள் அதிகம் வந்துசெல்லும் பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள், போக்சோ வழக்குகளில் எஃப்ஐஆர் பதிவில் தாமதம் ஏற்படக் கூடாது. கள்ளச் சாராயத்தை தடுக்க, காவல், வருவாய், வனத் துறை அதிகாரிகள் மலைப் பகுதிகளில் சட்டவிரோத வடிகட்டல் இடங்கள் பற்றிய தகவலை சேகரிக்க வேண்டும். சுகாதாரத் துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் போதை முறிவு முகாம்கள் நடத்த வேண்டும்.
எல்லையோர மாவட்டங்கள் வழியாக போதைப் பொருட்கள் கடத்தப்படுகிறதா, உரிய அனுமதியின்றி கனிம வளங்கள் கடத்தப்படுகிறதா என்று தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை, கோவை, திருப்பூர் போன்ற தொழில் துறை மண்டலங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் குட்கா மற்றும் பிற போதைப் பொருள்களின் பரவலை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
காவிரி, வைகை மற்றும் பிற ஆற்று மணல் படுகைகளில் சட்ட விரோத மணல் திருட்டை தடுத்து நிறுத்த வேண்டும். பட்டாசு, ரசாயனத் தொழிற்சாலைகளில் தொழில் துறை பாதுகாப்பு நடைமுறைகள் கண்டிப்பாக அமல்படுத்தப்பட வேண்டும்.
புயல், வெள்ளத்தால் பாதிக்கப்படும் டெல்டா, கடலோர மாவட்டங்கள், நீலகிரி, மேற்குத் தொடர்ச்சி மலையின் மலைப் பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தி, பேரிடர் தயார் நிலை குறித்து தணிக்கை நடத்த வேண்டும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பருவமழைக் காலத்துக்கு முன்பு மீட்பு உள்கட்டமைப்பில் உள்ள தேவைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.
நாட்டிலேயே அதிக சாலை விபத்து மரணங்கள் தமிழகத்தில் நிகழ்வது வருத்தமாக உள்ளது. விபத்து அதிகம் நடக்கும் இடங்கள் கண்டறியப்பட்டு, அதிக ஆபத்துள்ள பகுதிகளில் சாலை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள வேண்டும். தலைக் கவசம் அணிவது உள்ளிட்ட சாலை விதிகள் கடைபிடிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். காவல் நிலையங்களுக்கு வரும் மக்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும். சமூக வலைதள மோசடி குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஆட்சியர்கள், எஸ்.பி.க்கள் நேர்மையாக, வெளிப்படைத் தன்மையுடன் பணியாற்ற வேண்டும். இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.
அடிப்படை வசதிகளில் முக்கிய கவனம்: ரேஷன், கல்வி, குடிநீர், சுகாதாரம், மின்சாரம், போக்குவரத்து போன்ற அடிப்படை வசதிகளில் நாம் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். மனு கொடுக்க வரும் மக்களிடம் கனிவாக குறைகளைக் கேட்டறிந்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். திங்கள் தவிர மற்ற நாட்களில் காலையில் கள ஆய்வுக்குச் செல்ல வேண்டும். வேலை செய்வது, மனு வாங்குவது மட்டுமின்றி, தொடர் கண்காணிப்பும் ஆட்சியர்களுக்கு முக்கியம். அதற்காக ஓர் அலுவலரை நியமித்து தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரேஷன் கடைகளில் எடை குறைபாடு இன்றி, தரமான உணவுப் பொருட்கள் வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும். பேரிடர் காலங்களில் நிவாரணம், மீட்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தினார்.