

சென்னை மற்றும் விழுப்புரம் மண்டல திமுக வாக்குச்சாவடி குழுவினருக்கான பயிற்சி மாநாடு திருவிடந்தையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் கட்சியினரின் உற்சாக வரவேற்பை ஏற்றுக் கொண்டார்.
வரக்கூடிய சட்டப்பேரவைத் தேர்தல் தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? என்பதை நிர்ணயிக்கும் தேர்தல் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி அளவிலான கட்டமைப்பை வலுப்படுத்த ‘என் வாக்குச்சாவடி-வெற்றி வாக்குச்சாவடி’ என்ற இயக்கத்தை திமுக முன்னெடுத்துள்ளது.
அதன் ஒருபகுதியாக பூத் ஏஜென்ட்களை தேர்தல் பணிக்கு முழுமையாக தயார் செய்வதற்காக பயிற்சி மாநாடுகள் 4 மண்டலங்களில் நடத்தப்பட உள்ளன. அந்தவகையில் சென்னை மற்றும் விழுப்புரம் மண்டலங்களுக்கான மாநாடு காஞ்சிபுரம் திருவிடந்தையில் நேற்று நடைபெற்றது. இதற்கு தலைமை வகித்த திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், கட்சியின் பிரச்சாரப் பாடல் மற்றும் கையேட்டை வெளியிட்டார்.
மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: வட தமிழகம் எப்போதுமே திமுகவின் கோட்டை என்பதை மீண்டும் நாம் நிரூபிக்க வேண்டும். அதற்கு சென்னை, விழுப்புரம் மண்டலங்களில் வரும் 49 தொகுதிகளின் வெற்றியை நாம் உறுதிசெய்ய வேண்டும். தேர்தல் பணி என்று வந்துவிட்டால் நமது தொண்டர்களை அடித்துக் கொள்ள ஆளில்லை. தமிழகம் முழுவதும் ஒவ்வொரு பூத்திலும் சராசரியாக 10 வாக்குச்சாவடி குழு உறுப்பினர்களை நியமித்துள்ளோம்.
இந்தியாவில் வேறு எந்த கட்சிக்கும் இல்லாத கட்டமைப்பு நம்மிடம் உள்ளது. தமிழகத்தில் உள்ள மொத்த பூத்களின் எண்ணிக்கை 75 ஆயிரம். ஒவ்வொரு பூத்துக்கும் நாம் வைத்துள்ள இலக்கு 350 வாக்குகள்தான். இந்த நாம் பெற்றாலே 2.6 கோடி வாக்குகள் வாங்கிவிடலாம். இதை சாத்தியப்படுத்திக் காட்டுவது உங்கள் பொறுப்பாகும். உங்கள் உழைப்பில்தான் நாம் 7-வது முறையாக ஆட்சிக்கு வரப்போகிறோம். எத்தனை தொழில்நுட்பங்கள் வந்தாலும் தேர்தல் பிரச்சாரத்தின் அடிப்படைதான் முக்கியம். அதற்கு நீங்கள் ஒவ்வொருவரும் 100 வாக்காளர்களை தேர்தலுக்குள், குறைந்தது 5 முறையாவது சந்தித்தாக வேண்டும்.
தமிழகத்தில் ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலை, எங்குமே இல்லாத நிலைதான் இன்றைக்கு இருக்கிறது. இதை அப்படியே வெற்றியாக அறுவடை செய்வது உங்கள் கையில்தான் உள்ளது. 2021-ல் இருந்ததைவிட தமிழகம் முழுவதும் நமக்கான வரவேற்பும், ஆதரவும் கூடிவருகிறது. நிச்சயமாக இந்த தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் நம்மால் வெல்ல முடியும். வீடுவீடாக சென்று இயல்பாக, உரிமையோடு பிரச்சாரம் செய்யுங்கள். ஒவ்வொருவரும் அரசு செய்துள்ள மகளிர் உதவித்தொகை, காலை உணவு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மக்கள் மத்தியில் பரப்புரை செய்ய வேண்டும்.
அதேபோல், ஆட்சிக்கு யார் வரக்கூடாது என்பதையும் மக்களுக்கு விளக்கிச் சொல்ல வேண்டும். நம்முடைய கூட்டணியை தவிர வேறு யாருக்கு வாக்களித்தாலும், பாஜகதான் பின்னணியில் ஆட்சி செய்யும். இந்த தேர்தல் 2 கூட்டணிகளுக்கு இடையேயான போட்டியல்ல. வெல்லப் போவது தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா என்பதை நிர்ணயிக்கும் தேர்தல்தான் வரக்கூடிய சட்டப்பேரவைத் தேர்தல். தமிழகத்தை காக்க அனைவரும் திமுகவை ஆதரிக்க வேண்டிய தேவையை விளக்க வேண்டும்.
நாம் போராடுவது திமுகவின் வெற்றிக்காக அல்ல, தமிழகத்தின் வெற்றிக்காக. பாஜகவின் டப்பா இன்ஜின் முன்பு, தமிழகத்தின் திராவிட மாடல் சூப்பர் பாஸ்ட் இஞ்சின் என்றும் தலைகுனியாது. இந்த உறுதியை ஒவ்வொரு வாக்காளருக்கும் கொண்டு செல்ல வேண்டியது உங்களின் பணியாகும்.
கூட்டணி, தொகுதிப் பங்கீடு பற்றி எல்லாம் கவலைப்படாதீர்கள். அதை நான் பார்த்துக் கொள்கிறேன். 234 தொகுதிகளிலும் இந்த ஸ்டாலின்தான் வேட்பாளர் என்று நினைத்து வேலை பாருங்கள். தோழமைக் கட்சிகளுடன் ஒற்றுமை உணர்வுடன் நாம் பணியாற்ற வேண்டும். இதைச் செய்தாலே, 2024 போல் முழு வெற்றி நம் வசமாகிவிடும். இவ்வாறு அவர் பேசினார்.