

‘ஆட்சியில் பங்கு’ என காங்கிரஸ் தலைவர்கள் போர்க்கொடி உயர்த்திக் கொண்டிருக்கும் சூழலில், ‘கூட்டணி ஆட்சியெல்லாம் தமிழகத்துக்கு சரிப்பட்டு வராது’ என தடாலடியாக மறுத்துள்ளார் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின்.
விஜய் அரசியலுக்கு வந்தது தமிழகத்தில் பல்வேறு கட்சிகளுக்கும் அனுகூலமாகிவிட்டது. டிடிவி தினகரன், அன்புமணி தொடங்கி கிருஷ்ணசாமி வரை தவெகவை வைத்து கேம் ஆடிய நிலையில், காங்கிரஸும் விஜய்யை வைத்து திமுகவுக்கு தண்ணி காட்டிக் கொண்டிருக்கிறது.
கடந்த சில வாரங்களாகவே காங்கிரஸில் கலகக் குரல்கள் அதிகமாகியிருக்கிறது. ‘ஆட்சியில் பங்கு வேண்டும், அதிகம் தொகுதிகள் வேண்டும்’ என்பதை அழுத்தமாக சொல்லி வருகின்றனர் பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்டோர். இவர்களின் கோரிக்கைக்கு வலு சேர்ப்பதுபோல டெல்லி தலைமையும் பெரிதாக கண்டிக்காமல் அப்படியே விட்டுவிட்டது.
2006-ல் 34 தொகுதிகளில் வென்று, 96 தொகுதிகளில் மட்டுமே வென்றிருந்த திமுகவுக்கு ஆட்சியில் பங்கு கோராமலேயே பரிபூரண ஆதரவளித்தது காங்கிரஸ். 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகள் திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்டது. அதன்பின்னர் 2016-ல் காங்கிரஸுக்கு 41 தொகுதிகள் மட்டுமே கொடுத்தது திமுக.
2021 சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸுக்கான கோட்டாவை இன்னும் குறைத்து 25 ஆக்கியது. 2026 தேர்தலில் காங்கிரஸுக்கான தொகுதிகள் இன்னும் குறைக்கப்படலாம் என்று அரசல் புரசலாக பேசப்பட்டது. இதனை மனதில் வைத்தே காங்கிரஸ் சார்பில் அமைக்கப்பட்ட குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை தவிர்த்து வந்தது திமுக.
தங்களுக்கான தொகுதிகள் குறைக்கப்படலாம் என்பதை யூகித்த காங்கிரஸ், அடுத்த ஆப்ஷனாக தவெகவை கையில் எடுத்தது. மிகக் குறைவான தொகுதிகளை திமுக ஒதுக்கினால், தவெக பக்கம் செல்வோம். வெற்றிபெறவில்லை என்றாலும், கட்சியை உயிர்ப்பிப்போம். விஜய்யின் செல்வாக்கை வைத்து தேர்தல் நடைபெறவுள்ள புதுச்சேரி, கேரளாவில் வெற்றி பெறுவோம் என்றெல்லாம் கணக்குப் போட்டது.
இந்தக் கணக்கின் வெளிப்பாடாகவே ஆட்சியில் பங்கு என்ற முழக்கத்தை முன்வைக்க ஆரம்பித்தது காங்கிரஸ். திமுக கூட்டணிக்கு ஆதரவாக ஒரு சாரரும், தவெக கூட்டணிக்கு ஆதரவாக ஒரு சாரரும் என களத்தில் தீவிரமாக பேசி வருகின்றனர். தவெக தரப்பிலும், ‘70 தொகுதிகள், துணை முதல்வர் பதவி, ஆட்சியில் பங்கு’ என்றெல்லாம் காங்கிரஸுக்கு தூண்டில் போடப்பட்டுள்ளது.
இது ஒருபுறமிருக்க, திமுகவுடன் கூட்டணி குறித்து பேச 70 நாட்களுக்கும் மேலாக காத்திருக்கிறோம் என வெளிப்படையாகவே சொல்லி அதிர்ச்சியூட்டினார் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர். இதனை தொடர்ந்து பிப்.22 முதல் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை தொடங்குவோம் என திமுக அறிவித்துள்ளது.
இந்தச் சூழலில்தான் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பதெல்லாம் ஒத்துவராது என்று உறுதியாக சொல்லியுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர், “திமுக கூட்டணியில் குழப்பம் என திட்டமிட்டு பரப்பப்படுகிறது. திமுக - காங்கிரஸ் கூட்டணி இடையே எந்த குழப்பமும் இல்லை. திமுக, காங்கிரஸ் கூட்டணி இணக்கமாக இருக்கிறது. ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது. கூட்டணியில் முறிவு ஏற்படுவதற்காக ஆட்சியில் பங்கு என கிளப்பி விட்டு, சிலர் சதி செயலில் ஈடுபட்டுள்ளனர். அது எடுபடாது.
ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது என்பது காங்கிரஸுக்கு நன்றாக தெரியும். அரசியலை தாண்டி ராகுல் காந்தியை ஒரு சகோதரராக பார்க்கிறேன். அவரும் அப்படித்தான். திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடர்ந்து இருக்கும்” என பொட்டில் அடித்தாற்போல சொல்லியுள்ளார்.
இதற்கு உடனடியாக பதிலளித்த காங்கிரஸின் பிரவீன் சக்கரவர்த்தி, “இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் கூட்டணி அரசை ஏற்கும் நிலையில், தமிழ்நாடு மட்டும் ஏன் ஏற்காது? இந்தியாவில் மற்ற மாநில மக்களை போல் தமிழ்நாட்டு மக்களும் கூட்டணி ஆட்சிக்கு ஆதரவாகவே உள்ளனர். கூட்டணி ஆட்சி அமைவதில் தமிழக மக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை’ எனத் தெரிவித்தார்.
இவரின் கருத்தை ஆமோதித்த காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், ‘மக்கள் முடிவு செய்வார்கள் கூட்டணி ஆட்சியா அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை. 2006-ல் மக்கள் தீர்பை செயல்படுத்தாதது காங்கிரஸ் கட்சியின் தவறு’ எனத் தெரிவித்தார்.
இன்றைய நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், அரசியலுக்கு அப்பாற்பட்டு ராகுல் காந்தி என் சகோதரர் போன்றவர் எனச் சொல்லியுள்ளார். ஆனால், ‘ஆட்சியில் பங்கு’ என குரலெழுப்பும் அத்தனை காங்கிரஸ் தலைவர்களும் ராகுல் காந்திக்கு நெருக்கமானவர்கள் என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம். ஆட்சியில் பங்கு இல்லை என உறுதியாக மறுத்திருக்கிறார் ஸ்டாலின். அடுத்தகட்டமாக காங்கிரஸ் என்ன செய்யப்போகிறது என்று பார்ப்போம்.