

சென்னை: தொகுதி மறுவரையறை என்பது சமூக நீதியைச் சிறுமைப்படுத்துவதற்கான தன்னிச்சையான அரசியல் சதித் திட்டம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடி தலைமையிலான என்டிஏ அரசு நாடாளுமன்றத்தின் அடிப்படை அமைப்பையே திட்டமிட்டுச் சீர்குலைக்கிறது. தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான முன்மொழிவு, ‘குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம்’ என்ற அவர்களின் சொந்த முழக்கத்துக்கே எதிரானதாக அமைந்துள்ளது. இந்த முடிவினால் மக்களின் வரிப்பணம் வீணாகும், நாடாளுமன்றச் செயல்பாடுகளின் தரம் குறையும். மேலும், இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியமாக வரையறுக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 1-க்கும் இது எதிரானது. இது பன்முக, கூட்டாட்சித் தன்மையைச் சிறுமைப்படுத்தும் ஒற்றைத்துவ எல்லை மீறலாகும்.
இதற்கெல்லாம் மேலாக, தொகுதி மறுசீரமைப்பு என்பது, பாஜக ஆதிக்கம் செலுத்தும் வடமாநிலங்களுக்கு ஆதரவாக வலுவூட்டி, தென்மாநிலங்களின் குரலை நெரிக்கும். வட மாநிலங்களின் தொகுதி எண்ணிக்கை இரு மடங்காகும். அதேவேளை தென் மாநிலங்களின் அளவு 24 சதவீதத்திலேயே தேங்கி நிற்கிறது. இது மக்கள் தொகையை சிறப்பாகக் கட்டுப்படுத்தியதற்காகத் தமிழகம், கர்நாடகா, கேரளம், தெலங்கானா போன்ற மாநிலங்களைத் தண்டிப்பதாகும்.
இது அவசரகதியில் தற்போது செய்யப்படுவதும் நம் அச்சத்தை அதிகமாக்குகிறது. இத்தகைய முக்கிய நடவடிக்கையை மாநிலத் தேர்தல்களுக்கிடையே திணிக்க வேண்டிய அவசியம் என்ன? தேர்தல் சார்ந்த கதையாடல்களை வடிவமைக்கவும், பெண் வாக்காளர்களிடம் செல்வாக்கு பெறவும் 2024 நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலின்போது செய்த முந்தைய முயற்சிகளைப் போலவே இதுவும் அமைந்துள்ளது.
பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை நாங்கள் முழுமனதோடு ஆதரிக்கிறோம். அதில் மாற்றுக்கருத்துக்கே இடமில்லை. ஆனால், பொறுப்போடு செயல்பட்ட மாநிலங்களைத் தண்டிக்கும் வகையில் தொகுதி எண்ணிக்கையை அதிகரிக்காமலேயே, அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றுதான் நாங்கள் கோருகிறோம். அவர்களின் நோக்கம் உண்மையானதாக இருந்தால், இப்போதுள்ள தொகுதி அளவிலேயே மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்குவதை எதுவும் தடுக்கவில்லையே?
‘வளர்ந்த இந்தியா’ என ஒருபுறம் சொல்லிக்கொண்டே பல ஆண்டுகளாக கிரீமிலேயர் உச்சவரம்பை ரூ.8 லட்சத்தில் இருந்து மாற்றாமல் வைத்திருந்து ஓ.பி.சி. மக்களுக்கு அவர்களுக்குரிய பங்கீடு கிடைக்காமல் வஞ்சித்தார்கள். இதர பிற்படுத்தப்பட்ட மகளிரின் பிரதிநிதித்துவத்துக்கான எந்தவித உத்தரவாதத்தையும் வழங்கவில்லை. 2027 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் மூலம் முதல்முறையாக நாம் அறியவுள்ள சாதிவாரி எண்ணிக்கை முடிவுகளைக்கூட பரிசீலிக்காமல் அவசரமாக அவர்கள் செயல்படுவது இதில் அவர்களுக்கு உண்மையான அக்கறை இல்லை என்பதை அம்பலப்படுத்துகிறது.
இவர்கள் செய்ய நினைப்பது சீர்திருத்தமே அல்ல, இது அதிகாரத்தை ஓரிடத்தில் குவித்து, நாடாளுமன்றத்தை பலவீனப்படுத்தி, தென்னகத்தை விளிம்பு நிலைக்குத் தள்ளி, சமூக நீதியைச் சிறுமைப்படுத்துவதற்கான தன்னிச்சையான அரசியல் சதித் திட்டம் என முதல்வர் தெரிவித்துள்ளார்.