

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரங்களை மெத்தனமின்றி தீவிரப்படுத்த வேண்டுமென திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தொடர் பிரச்சாரம் செய்துவருகிறார்.
இந்நிலையில் ஸ்டாலின் தலைமையில் தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் காணொலி வாயிலாக நேற்று நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள், பகுதிச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தொகுதிகளில் இதுவரை செய்யப்பட்ட பணிகள், அடுத்து மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள், பூத் கமிட்டிகளின் நிலையை ஆய்வு செய்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
அப்போது சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் குறைந்த கால அவகாசமே உள்ளது. எனவே, நிர்வாகிகள் மெத்தனமாக இருக்காமல் பிரச்சாரங்களை தீவிரப்படுத்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘வெற்றி ஒன்றே இலக்கு, ஓய்வின்றி உழைக்கும் கட்சியின் செயல்வீரர்களுக்குப் பாராட்டுகள். நேற்று இரவு கோவையில் முதற்கட்ட பரப்புரை பயணத்தை முடித்துவிட்டு, சென்னைக்கு திரும்பினேன். இன்று காலை தமிழகம் முழுவதும் களப்பணியாற்றி மக்களின் நம்பிக்கையை வாக்குகளாக உறுதி செய்துவரும், கட்சி நிர்வாகிகளுடன் உரையாடி அவர்களை ஊக்கப்படுத்தினேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
திமுகவில் அமமுக முன்னாள் எம்எல்ஏக்கள்: இதற்கிடையே அமமுக முன்னாள் எம்எல்ஏ-க்களான சி.கோபால், என்.ஜி.பார்த்திபன் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் நேற்று திமுக-வில் இணைந்தனர். இவர்கள் இருவரும் டிடிவி.தினகரனுக்கு மிக நெருக்கமாக இருந்தவர்கள் எனவும், தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்காத அதிருப்தியில் திமுக-வில் இணைந்ததாகவும் சொல்லப்படுகிறது.