

சென்னை: கொருக்குப்பேட்டை மணலி சாலையில் ரூ.96.04 கோடியில் புதிதாக கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலத்தை திறந்துவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.75 கோடியில் கட்டப்படவுள்ள மேம்பாலத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: போக்குவரத்து நெரிசல் மிகுந்த கொருக்குப்பேட்டை, மணலி சாலை மற்றும் எண்ணூர் நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வே 2பி மற்றும் 2ஏ சந்திப்புகளின் வழியாக நாள்தோறும் சுமார் 42 ஆயிரம் வாகனங்கள் கடந்து செல்கின்றன.
ரயில் போக்குவரத்துக்கு ஏதுவாக இவற்றை அவ்வப்போது நிறுத்தி அனுப்ப வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் இவ்விரு சந்திப்புகளை கனரக வாகனங்களும், பொதுமக்களும் கடப்பதற்கு காலதாமதமாகிறது.
இதன் காரணமாக, மணலி சாலை,எண்ணூர் நெடுஞ்சாலையில் மேம்பாலங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு, நகராட்சி நிர்வாகத் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, கொருக்குப்பேட்டை, மணலி சாலையில் ரயில்வே 2பி சந்திப்பில் ரூ.96.04 கோடியில் புதிய பாலம் கட்டப்பட்டது.
இந்த பாலத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து, வாகனத்தில் பயணித்தார். பின்னர், தண்டையார்பேட்டை மண்டலம், கொருக்குப்பேட்டை, எண்ணூர் நெடுஞ்சாலையில் ரயில்வே 2ஏ சந்திப்பில், ரூ.75 கோடியில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணிக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
மேலும், கொருக்குப்பேட்டை மணலி சாலையில் புதிய பாலத்துக்கு அருகில் ரூ.1.10 கோடியில் அமைக்கப்பட உள்ள பூங்காவுக்கும் அடிக்கல் நாட்டினார். இப்பூங்கா பசுமைத் தாவரங்கள், சுற்றிலும் நடைப் பயிற்சிக்கான பாதை, இருக்கைகள், மின்விளக்குகள் உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்படுகிறது.
இந்நிகழ்வில், அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, நகராட்சி நிர்வாகத் துறை செயலர் தா.கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், சென்னை குடிநீர் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் டி.ஜி.வினய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.