மத்திய அரசின் மக்கள் விரோத சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர்.
காஞ்சி, செங்கை, திருவள்ளூர் மாவட்டங்களில் சாலை, ரயில் மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் கைது
செங்கை/காஞ்சி/திருவள்ளூர்: மத்திய அரசின் மக்கள் விரோத சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் பல்லாவரம், காஞ்சிபுரம் பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது.
பல்லாவரம் அஞ்சலகம் முன்பு நடைபெற்ற மறியலுக்கு சிஐடியு அகில இந்திய செயலாளர் ஆர்.கருமலையான் தலைமை தாங்கினார். இதில் தென்சென்னை மாவட்டத் தலைவர் ஏ.முருகானந்தம், பொருளாளர் ஏ.நடராஜன் மற்றும் எம்.சந்திரன் (தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்) உட்பட 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டு இந்தியன் வங்கி எதிரில் தொமுச மாநில துணைத் தலைவர் பொன்ராம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் சீ.யூ மாநில துணை பொது செயலாளர் கே.திருச்செல்வன், ஏஐடியூசி மாவட்ட செயலாளர் ஜகாங்கீர், சிஐடி மாவட்ட செயலாளர் க.பகத்சிங் தாஸ் உட்பட 500-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
காஞ்சிபுரத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து திருமால்பூர் நோக்கிச் சென்ற மின்சார ரயிலை, காஞ்சிபுரம் பழைய ரயில்வே நிலையம் அருகே வழிமறித்து மறியலில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு, ஏஐடியூசி, தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் உள்ளிட்ட முக்கிய தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.நேரு, சிஐடியு மாவட்டச் செயலாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் இந்தப் போராட்டத்துக்கு தலைமை தாங்கினர். தண்டவாளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து போலீஸார் விடுவித்தனர்.
கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்துக்குள் போலீஸாரின் தடையை மீறி நுழைந்த, தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் துளசிநாராயணன், சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் அர்ஜுனன், ஏஐடியுசி மாவட்ட துணைத் தலைவர் அருள் உள்ளிட்ட 200- க்கும் மேற்பட்டோர் ரயில்வே இருப்புப் பாதையில் கோரிக்கை முழக்கமிட்டனர்.
திருவள்ளூர், திருநின்றவூர், திருத்தணி, மீஞ்சூர், பொன்னேரி ஆகிய 5 ரயில் நிலையங்களில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற சிஐடியு மாநில துணைத் தலைவர் விஜயன், மாநில குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் ஏ.ஜி.சந்தானம், ஏஐடியுசி மாவட்ட செயலாளர் கஜேந்திரன், ஐஎன்டியுசி மாவட்ட செயலாளர் ஜெயபால், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் தவமணி உள்ளிட்ட 350-க்கும் மேற்பட்டோரை போலீஸார் தடுத்து கைது செய்தனர்.
செங்குன்றம், தாமரைப்பாக்கம், ஆர்கே பேட்டை ஆகிய 3 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட ஏஐசிசிடியு மாநில துணை தலைவர் ஜானகிராமன், ஆட்டோ சங்கத்தின் மாவட்ட செயலாளர் சந்திரசேகரன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் அ.து.கோதண்டன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சம்பத் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
