

பரமக்குடியில் பேசிய முதல்வர் ஸ்டாலின்
பரமக்குடி: கொள்கையற்ற அடிமைக் கூட்டத்தை, சுயநலத்திற்காக தமிழ்நாட்டை அடகு வைக்க ஒன்று சேர்ந்திருக்கும் துரோகக் கூட்டத்தை, மக்கள் விரட்டியடிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
பரமக்குடியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: “நாம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபோது, தமிழ்நாடு என்ன நிலையில் இருந்தது? கரோனாவில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் கூட கிடைக்காத நிலையில் இருந்தது. தமிழ்நாட்டின் பொருளாதாரம் 0.07 விழுக்காடு என்று சரிந்து கிடந்தது. நிதிநிலைமை படுபாதாளத்தில் இருந்தது.
போர்க்கால அடிப்படையில் என்று சொல்வார்கள் அல்லவா... அது போன்று, முதலில் கரோனாவில் இருந்து மக்களை மீட்டெடுத்தோம். அடுத்து, திறமையான நிர்வாகத்தால் நிதி நிலைமையை மீட்டெடுத்திருக்கிறோம். அதன் பயனாக, இந்தியாவிலேயே முதல் மாநிலமாக 11.19 விழுக்காடு என்ற டபுள் டிஜிட் பொருளாதார வளர்ச்சியை கொண்டு வந்திருக்கிறோம். இதெல்லாம் சாதாரணமாக நடக்கவில்லை. கடுமையாக உழைத்திருக்கிறோம்.
சிந்தித்துப் பாருங்கள்... கடந்த ஐந்தாண்டுகளில் என்னை செய்திகளில் பார்க்காத நாள் இருக்காது. ஆய்வுக்கூட்டம் – கள ஆய்வுகள் – அரசு நலத்திட்ட விழாக்கள் – காணொளி வாயிலாக திறப்பு விழாக்கள் - நேரடியாக மக்கள் சந்திப்பு என தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருந்தேன். நான் மட்டுமல்ல, அரசு இயந்திரத்தையே முழுமையாக செயல்பட வைத்தேன். அமைச்சர்கள் தொடங்கி, கடைநிலை ஊழியர்கள் வரைக்கும், கடுமையான உழைப்பைப் போட்டு, தமிழ்நாட்டை மீட்டு, இன்று இந்தியாவிலேயே நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாட்டை கொண்டு வந்திருக்கிறோம்.
ஆனால், இந்த வளர்ச்சி போதுமா நமக்கு? போதாது, சொல்லுங்கள்... தமிழ்நாட்டுக்கு இந்த வளர்ச்சி போதுமா? நிச்சயம் போதாது! தமிழ்நாட்டை, உலக அளவில் தனி பிராண்டாக நாம் வளர்த்தெடுக்க வேண்டும்! அதற்கு, ஏப்ரல் 23-ஆம் தேதி நீங்கள் அனைவரும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.
நான் கேட்கும் ஒரே கேள்வி. இப்படி என்றைக்காவது ஒருநாள் பழனிசாமி பேசியிருக்கிறாரா? அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? மறைந்த தலைவர்களை – நம்முடைய நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் தலைவர்களை கொச்சைப்படுத்தி பேசுவது, அடுத்தவர்களின் மரணத்தை எதிர்பார்த்துப் பேசுவது, பெண்களைக் கண்ணியமில்லாமல் பேசுவது என்று தொடர்ந்து செய்து கொண்டு இருக்கிறார். வாய்க் கொழுப்பு எடுத்து சாக்கடைக்கு சரிசமமாக வந்து விழும் அவருடைய வார்த்தைகளுக்கு பாடம் புகட்டப் போகும் நாள்தான், ஏப்ரல் 23.
கொள்கையற்ற அடிமைக் கூட்டத்தை, சுயநலத்திற்காக தமிழ்நாட்டை அடகு வைக்க ஒன்று சேர்ந்திருக்கும் துரோகக் கூட்டத்தை, மக்கள் விரட்டியடிக்க வேண்டும். சாதனைகளால் தமிழ்நாட்டை உயர்த்தியிருக்கும் திராவிட மாடல் அரசை மீண்டும் ஆட்சியில் நீங்கள் அமர்த்த வேண்டும். ஏனெனில், திராவிட மாடலின் திட்டங்கள் என்பது வரலாற்றில் நிற்கும் திட்டங்கள் மட்டுமல்ல; புது வரலாற்றையே படைக்கும் திட்டங்கள். வெறும் புள்ளி விவரங்களில் அல்ல; கோடிக்கணக்கான தமிழ் மக்களின் புன்னகையால் எழுதப்பட்டிருக்கும் சாதனை சரித்திரம்தான் திராவிட மாடல்.
முதலமைச்சரான முதல் நாள் நான் போட்ட முதல் கையெழுத்தே, மகளிர் முன்னேற்றத்திற்கான மாபெரும் படிக்கட்டாக அமைந்த விடியல் பயணத் திட்டம். நம்முடைய அரசு பொறுப்பேற்ற 1800 நாட்களில், 935 கோடிக்கும் அதிகமான பயணங்களை மகளிர் மேற்கொண்டிருக்கிறார்கள். ஊரெல்லாம் சுற்றி, பூ, காய்கறி விற்று, 5 ஆயிரம் சம்பாதித்தால், அதில் ஆயிரம் ரூபாய் பேருந்திற்கே போய்விடுகிறதென்று கவலைப்பட்டு வேதனையோடு இருந்த பல சகோதரிகள், விடியல் பயணத்தால் பயணிக்கும் ஒவ்வொரு நாளும் இந்த ஸ்டாலினை நிச்சயமாக நினைப்பார்கள்.
பக்கத்து நகருக்கு வேலைக்குச் செல்லும் சகோதரிகள், இந்த ஸ்டாலினுக்கு நன்றி கூறுவார்கள். இரண்டு, மூன்று ஊர் தள்ளியிருக்கும் அப்பா-அம்மாவையும், உறவினர்களையும் அடிக்கடி பார்க்க முடியாமல் தவித்த பெண்கள், நினைத்த உடனே, பேருந்து ஏறிப் போய், அவர்களின் அப்பா–அம்மாவை பார்க்கும்போது, நிச்சயமாக இந்த அண்ணனை நினைப்பார்கள். இப்படி மகளிர் வாழ்வுடன் ஓர் அங்கமாகிவிட்ட விடியல் பயணத்திற்கான பேருந்துகளை, விரைவில் அமையப் போகும் திராவிட மாடல் 2.0 ஆட்சியில், அதிகரிக்கப் போகிறோம்.
இதுமட்டுமா, ஒரு கோடியே 31 லட்சம் மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாயை வழங்கிக் கொண்டிருக்கும், “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” இரண்டாயிரம் ரூபாயாக உயரப் போகிறது.
அடுத்து, அரசுப் பள்ளியில் படித்து, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகளுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும், புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டம். இனி அந்தத் தொகை, ஆயிரத்தி 500 ரூபாயாக உயரப் போகிறது.
19 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு சூடாக, சுவையாக சத்தான உணவை வழங்கும் “காலை உணவுத் திட்டம்”. இனி அதை, எட்டாம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப் போகிறோம். அதனால்தான், “வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது” என்று இருந்த நிலையை மாற்றி, “தெற்குதான் வழிகாட்டுகிறது” என்ற நிலையை திராவிட மாடலில் உருவாக்கி இருக்கிறோம்.
அப்படி வழிகாட்டும் தெற்கை, வஞ்சிக்கும் செயலில்தான் ஒன்றிய பாஜக அரசு இறங்கியிருக்கிறது. மகளிருக்கு இடஒதுக்கீடு கொடுக்கிறோம் என்பதை காரணமாக காட்டி, ஒன்றியத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை குறைக்கப் பார்க்கிறார்கள். மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தி, நாட்டின் வளர்ச்சிக்கு துணைநின்ற தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களை தண்டிக்கப் பார்க்கிறார்கள். இதை, இந்தியாவில் இருக்கும் அத்தனை ஜனநாயக இயக்கங்களும் எதிர்க்கப் போகிறோம்.
இந்த அநியாயத்தை எல்லாம் எதிர்த்து கேள்வி கேட்கும் துணிச்சல் பழனிசாமிக்கு இருக்கிறதா? மற்றவற்றுக்கெல்லாம் வாய்கிழியப் பேசும் பழனிசாமி, பாஜக-வின் அட்டூழியங்களை எதிர்த்து கேள்வி கேட்க சொன்னால் மட்டும், “சைலண்ட் மோடுக்கு” போய் விடுகிறார். மோடியையும் – அமித்ஷாவையும் எதிர்த்து பேச வேண்டுமென்றால் பயத்திலேயே “ஸ்விட்ச் ஆஃப்” ஆகிவிடுவார்.
அவர் எதற்காக பிரச்சாரத்திற்கு போகிறார் தெரியுமா? இப்படிப்பட்ட ஒரு அடிமை, உலகத்தில் யாருமே பார்த்ததில்லை என்ற கின்னஸ் சாதனையைப் படைக்கத்தான் பிரச்சாரம் செய்கிறார்! இவரின் ஓனர் யாரு? பாஜக. பாஜகவுக்கு தமிழ்நாட்டின் மீது வரும் திடீர் அக்கறை என்பது, வெறும் அரசியல் ஸ்டண்ட் மட்டும்தான்! அவர்கள் செய்வது ராஜதந்திரம் இல்லை; இரட்டை வேட தந்திரம்.
அண்மையில், மேற்கு வங்கத்தில் தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கும் பாஜக, பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவோம் என்று சொல்லி இருக்கிறார்கள். நம்முடைய பன்முகத்தன்மைக்கு பாஜக விட்டிருக்கும் நேரடி சவால் இது. மேற்கு வங்கத்தில் இருந்து விட்டிருக்கும் அந்தச் சவாலை, அவர்களால் தமிழ்நாட்டில் விடமுடியவில்லை.
ஏன் என்றால், தமிழ்நாட்டை பாதுகாத்துக் கொண்டு இருப்பது “திராவிடப் பெருஞ்சுவர்!” தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - தலைவர் கலைஞர் கட்டிக் காத்த இந்தத் தமிழ்க் கோட்டையை - சமத்துவத்துக்கு எதிரான மதவாத கும்பல்கள் ஆக்கிரமிக்க ஒருநாளும் தமிழர்கள் அனுமதிக்க மாட்டார்கள்! இதை, பா.ஜ.க.வும் நன்றாக உணர்ந்திருக்கிறது!
தமிழ்நாட்டுக்கு வரிசை கட்டி வரும் பாஜக அமைச்சர்களும் - நட்சத்திரப் பேச்சாளர்களும் தொடர்ந்து என்ன பேசுகிறார்கள்? தமிழ்நாடு மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பேசுகிறார்கள்! இதை ஒரு நாளாவது கண்டித்திருக்கிறாரா பழனிசாமி? நாம் போராடுவது, திமுகவின் வெற்றிக்கு மட்டுமல்ல, கூட்டணியின் வெற்றிக்காகவோ மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வெற்றிக்காக” இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.