

சென்னை: 2024-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளை வென்ற தமிழ் சினிமா கலைஞர்களுக்கு முதல்வர் விஜய் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்திகளில் கூறியிருப்பதாவது:
முதல்வர் விஜய்: கடந்த 2024-ம் ஆண்டில் வெளிவந்த திரைப்படங்களுக்கான தேசிய திரைப்பட விருதுகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டன. அதில் நடிகரே இயக்கி நடித்த ‘ராயன்’ திரைப்படத்துக்கு சிறந்த தமிழ் திரைப்படத்துக்கான விருதும், `கேப்டன் மில்லர்’ திரைப்படத்துக்கு சமூக அக்கற்றை ஊக்குவிக்கும் விருதும், நடிகர் தனுஷுக்கு சிறப்புப் பிரிவில் சிறந்த நடிகருக்கான விருதும், `அமரன்' படத்துக்காக ராஜ்குமார் பெரியசாமிக்கு சிறந்த இயக்குநருக்கான விருதும், ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு சிறந்த பின்னணி இசைக்கான விருதும் அறிவிக்கப்பட்டன.
இத்துடன் ‘மகாராஜா’, ‘மெய்யழகன்’ படக்குழுவினருக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பல்வேறு பிரிவுகளில் 10 தேசிய திரைப்பட விருதுகளை வென்று சாதனை படைத்துள்ள தமிழ் திரையுலகக் கலைஞர்களுக்கு எனது பாராட்டுகள். 10 தேசிய திரைப்பட விருதுகளை தமிழ் திரையுலகம் வென்றுள்ளது பெருமைக்குரியது. வருங்காலங்களில் தமிழ்த் திரையுலகம் மேலும் பல விருதுகளைப் பெற வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ள ராயன், கேப்டன் மில்லர், அமரன், மகாராஜா உள்ளிட்ட திரைப்படக் குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள். தங்களின் கலைச்சேவை மக்களை மேன்மேலும் மகிழ்வித்து, இன்னும் பல அங்கீகாரங்களை பெறட்டும்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: தேசிய விருதுகளைப் பெற்று தமிழ் மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ள தமிழ் திரையுலகின் சாதனையாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். தேசிய விருது இவர்களது உழைப்புக்கு கிடைத்த தகுதியான அங்கீகாரமாகும்.
வீ த லீடர்ஸ் நிறுவனர் அண்ணாமலை: தேசிய விருது வென்ற நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உட்பட தமிழ் திரையுலகின் பெருமையை உயர்த்திய அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.
மநீம தலைவர் கமல்ஹாசன்: தேசிய விருது வென்ற அமரன் படக்குழுவினர், கல்கி படக்குழுவினர், கேரள நடிகர் மம்மூட்டி உட்பட அனைவருக்கும் எனது வாழ்த்துகள். உங்களுடைய சிறந்த பங்களிப்பால் இந்திய சினிமா மேலும் வளம்பெற்றுள்ளது.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில் தேசிய விருதுகள் அறிவிக்கப்படுவது மகிழ்ச்சிக்குரியது. அதிலும் தமிழ் திரையுலகுக்கு மொத்தம் 10 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது போற்றுதலுக்குரியது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: தமக்கு பிடித்த துறையில் விடாமுயற்சியாலும், அயராத உழைப்பாலும் தனித்திறனை வளர்த்து, தேசிய விருது பெற்று சாதனை படைத்த அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.