

கிரிஷ் சோடங்கர்
புதுச்சேரி: புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் அரசியல் விவகாரக் குழு கூட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி தலைமை தாங்கினார். மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கூறியது: “தவெகவுடன் கூட்டணி வைக்க தமிழக காங்கிரஸ் முடிவு எடுத்தது. தவெகவும் கூட்டணிக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது. இதையடுத்து கூட்டணிக்கான ஆதரவைத் தெரிவித்தோம்.
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் தொடர்பாக எந்த முடிவாக இருந்தாலும் புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி தான் எடுக்க வேண்டும். புதுச்சேரியில் கூட்டணி குறித்து தவெகவிடம் இருந்தும், புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டியிடம் இருந்தும் இதுவரை எந்த யோசனையும் வரவில்லை.
கட்சிக்கு இளம் ரத்தம் பாய்ச்ச உள்ளோம். கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள், வெளியேறியவர்கள் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்குத் திரும்ப வேண்டும். மறுசீரமைப்புச் செய்து கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
சட்டப்பேரவைத் தேர்தலின்போது கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை தொடரும். சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக வைத்திலிங்கம் எம்.பி கடிதம் கொடுத்திருந்தார். இருப்பினும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி இதுவரை அந்த ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.
தமிழக முதல்வர் விஜய் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். தமிழக ஆளுநர் உரையில் சமூகக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இதை வலியுறுத்தி வருகிறார்” என்றார்.
அப்போது, புதுச்சேரியில் காங்கிரஸின் நட்பு ரீதியிலான போட்டியால் தான் தோல்வி அடைந்தோம் என்று இண்டியா கூட்டணியில் இருந்த திமுக கூறியுள்ளதே என்று கேட்டதற்கு, "தோல்விக்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.
கூட்டணி பேச்சுவார்த்தையின்போது புதுச்சேரி காங்கிரஸ் தலைவர்களை சரிவர கலந்து ஆலோசிக்கவில்லை. தொகுதி ஒதுக்கீடு குறித்தும் சரியாக கலந்து ஆலோசிக்கப்படவில்லை. நட்பு ரீதியாக போட்டியிட்டவர்களும் காங்கிரஸ் கட்சியில் தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு பி படிவம் கொடுத்ததும் காங்கிரஸ் கட்சிதான்” என கிரிஷ் சோடங்கர் தெரிவித்தார்.