

சென்னை: தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய், மு.க.ஸ்டாலின், வைகோ, அன்புமணி, சீமானை அவர்களின் இல்லத்துக்குச் சென்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தவெக தலைவர் விஜய் தமிழக முதல்வராக நேற்று முன்தினம் பதவியேற்றார். அதைத்தொடர்ந்து, அரசியல் கட்சிகளின் தலைவர்களை மரியாதை நிமித்தமாக சந்திக்க முடிவு செய்த முதல்வர் விஜய், முதலாவதாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் இல்லத்துக்கு நேற்று பிற்பகலில் சென்றார்.
வீட்டு வாசலில் நின்றிருந்த முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து, அவரை ஆரத்தழுவி வரவேற்று வீட்டுக்குள் அழைத்து சென்றார். வீட்டுக்குள் இருந்த மு.க.ஸ்டாலினும் விஜய்யை ஆரத்தழுவி வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது, விஜய், ஸ்டாலின் இருவரும் ஒருவருக்கொருவர் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தனர். உதயநிதி ஸ்டாலின், புத்தகத்தை விஜய்க்கு பரிசளித்தார். பின்னர், சிறிது நேரம் மூன்று பேரும் ஒன்றாக அமர்ந்து பேசினர்.
இதையடுத்து, முதல்வர் விஜய், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்திப்பதற்காக, அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்றார். வீட்டு வாசலில் நின்றிருந்த மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ, விஜய்க்கு பொன்னாடை அணிவித்து வீட்டுக்குள் அழைத்து சென்றார்.
பின்னர் விஜய்க்கு வைகோ பொன்னாடை மற்றும் மாலை அணிவித்து மரியாதை செய்தார். விஜய்யும் வைகோவுக்கு பொன்னாடை அணிவித்தார். விஜய்க்கு வைகோ, துரை வைகோ, கட்சியினர் குடும்பத்தினர் வாழ்த்து தெரிவித்தனர். அவர்களுடன் அமர்ந்து விஜய் பேசினார்.
வீட்டு வாசலில் குவிந்திருந்த தொண்டர்கள், மக்களை பார்த்து விஜய், வைகோ இருவரும் கைகாட்டினர். பின்னர் வைகோ, கார் வரை சென்று விஜய்யை வழியனுப்பி வைத்தார்.
இதனை தொடர்ந்து, முதல்வர் விஜய், பாமக தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணியை சந்திப்பதற்காக, சென்னை அடுத்த பனையூரில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்றார்.
விஜய்யை அன்புமணி வரவேற்று வீட்டுக்கு அழைத்து சென்றார். அன்புமணிக்கு பொன்னாடை அணிவித்தும், மலர்கொத்து கொடுத்தும் விஜய் மரியாதை செய்தார். பதிலுக்கு விஜய்க்கு பொன்னாடை அணிவித்து அன்புமணி வாழ்த்து தெரிவித்தார்.
உடன் இருந்த அன்புமணியின் மனைவியும், பசுமை தாயகம் அமைப்பின் தலைவரும், தருமபுரி தொகுதி எம்எல்ஏவுமான சவுமியா அன்புமணி, விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார். விஜய்யும், அன்புமணியும் சிறிது நேரம் உரையாடினர்.
தொடர்ந்து, முதல்வர் விஜய், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்திப்பதற்காக, நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்றார்.
விஜய் வருவதை அறிந்த சீமான், வீட்டு வாசலிலேயே விஜய்க்காக காத்திருந்து, கார் கதவை திறந்து விஜய் இறங்கிய உடனே, விஜய்யை பாசத்துடன் ஆரத்தழுவி வரவேற்று கைபிடித்தபடியே வீட்டின் உள்ளே அழைத்து சென்றார்.
சீமானுக்கு பொன்னாடை அணிவித்து விஜய் மரியாதை செய்தார். பதிலுக்கு, விஜய்க்கு பழக்கூடை வழங்கி தனது வாழ்த்துகளை சீமான் தெரிவித்தார். சிறிது நேரம் சீமானுடன் உரையாடிவிட்டு விஜய் புறப்பட்டு சென்றார்.
முதல்வர் விஜய், அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்திக்கும் இந்த அணுகுமுறைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைதளப் பதிவில், ‘‘தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய், அரசியல் நாகரிகத்துடன் என்னை சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளை யும் வழங்கினேன்’’ என்று கூறியுள்ளார்.