

சென்னை: “தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்தி இருக்கிறார் முதல்வர் விஜய். ஒரு முதல்வர் இன்னொரு மாநிலத்துக்கு வருவதை வேண்டாம்னு சொல்லக்கூடிய அவமானம் முதல் முறையாக நடக்கிறது. தமிழ்நாட்டின் மீது இந்த அவமானத்தை கொண்டு வந்து சேர்த்த பழி விஜயை சாரும். காவிரி விவகாரத்தில் முதல்வர் விஜய்யின் முடிவால் தமிழ்நாட்டிற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது” என திமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பரந்தாமன் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பரந்தாமன், “நாக்கில் எலும்பில்லை என்பதற்காக வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி கொண்டுள்ளார் மைச்சர் நிர்மல் குமார். அவர் கருணாநிதி பற்றி பேச தகுதி துளியுமில்லை. தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் எல்லாம் முதல்வர் விஜய் எடுத்த நடவடிக்கைக்கு எதிராக உள்ளனர் என்கிறார்.
ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு கருத்து தெரிவிக்கும் போது அனைத்துக் கட்சி கூட்டம் எப்படி கூட்டமுடியும் என கேட்கிறார் நிர்மல் குமார். ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு இருப்பது தான் அரசியல் கட்சி. அவை அனைத்தையும் ஒருங்கிணைத்து அழைத்துச் செல்வது முதல்வருடைய வேலை. இதற்கு முன்பிருந்த தமிழக முதல்வர்கள் எல்லோருமே அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி உள்ளனர்.
ஜூன் 19-ம் தேதி சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட தீர்மானத்திற்கு திருத்தங்களை கொடுத்தது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின். அந்த திருத்தத்தையும் ஏற்றுக்கொண்ட இந்த அரசு 19.6.2026 அன்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பிறகு இன்றுவரை காவிரி நதிநீர் பிரச்சினை குறித்தும், மேகேதாட்டு விவகாரம் குறித்தும் இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்பதை வெளிப்படையாக விளக்க வேண்டும்.
தீர்மானத்தை போட்டுவிட்டு தூங்கிக் கொண்டிருக்கின்ற தூங்குமூஞ்சி தவெக அரசு இன்றைக்கு திராவிட முன்னேற்ற கழகத்தை பார்த்து, டி.கே.சிவகுமாரை கட்டுப்படுத்துகிறது என்று சொல்கிறார்கள்.
காங்கிரஸ் சொல்லுகிற பேச்சையே டி.கே.சிவகுமார் கேட்கவில்லை என்று நிர்மல் குமார் சொல்கிறார். நான் வெளிப்படையாக நிர்மல் குமாருக்கு சவால் விடுகிறேன். காங்கிரஸ் கட்சி என்ன பேசியது என்பதை பொதுவெளியில் சொல்ல வேண்டும். ராகுல் காந்தி நேற்றைக்கு தமிழ்நாட்டுக்கு வந்தாரே அவர் என்ன கருத்தை டி.கே.சிவகுமாருக்கு சொல்லி, அவர் கேட்கவில்லை என்பதை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். காங்கிரஸ் எதை அறிவித்து செய்யவில்லை என்பதை இங்கே விளக்க கடமைப்பட்டிருக்கிறார் முதல்வர் விஜய். அதுமட்டுமல்ல டி.கே.சிவகுமார் இன்றைக்கு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுகிறார். ஆனால் எங்களுடைய எதிர்க்கட்சி தலைவர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுங்கள் என்று சொன்னதை நீங்கள் செய்யவில்லை.
சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றிய பிறகு அவற்றை கடிதம் மூலமாக ஒன்றிய அரசுக்கு அனுப்புவது பிரயோஜனம் இல்லை. எல்லா கட்சி தலைவர்களும் அழைத்துக்கொண்டு டெல்லிக்கு சென்று, பிரதமரை, நீர்வளத்துறை அமைச்சரை சந்திக்க வேண்டும். இந்த பிரச்சனையில் தமிழ்நாடு ஒருமித்த கருத்தோடு ஒன்றாக இணைந்திருக்கிறது என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். இத்தகைய அழுத்தத்தை தருவோம் என்று சொன்ன கருத்திற்கு இதுவரை பதில் இல்லை.
கர்நாடகாவில் இருக்கக்கூடிய எல்லா அரசியல் கட்சி தலைவர்களும் ஒன்றாக நிற்கிறார்கள். ஆனால் இங்கே எல்லா கட்சி தலைவர்களையும் அழைக்க முதல்வர் விஜய்க்கு என்ன தயக்கம். நாட்டு மக்கள் மீதான அக்கரைதான் உங்களுக்கு முக்கியமே தவிர, ஈகோ முக்கியமல்ல. மேகேதாட்டு விஷயத்தில் ஒரு நடுவர் மன்றம் அமைக்கப்பட வேண்டுமா, வேண்டாமா?. வேண்டும் என்றால் அதற்கு இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது?. நீதிமன்றத்தை நாடுவதற்கான என்ன முயற்சிகள் எடுத்திருக்கிறீர்கள்?. 19.6.2026 அன்று தீர்மானம் போட்டுவிட்டு தூங்கி கொண்டிருக்கின்ற முதல்வர் இன்றுவரை உச்ச நீதிமன்றத்தில் ஏன் மனுதாக்கல் செய்யவில்லை?.
தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பிரச்சினைகளை தீர்க்கின்ற எண்ணம் முதல்வர் விஜய்க்கு கிடையாது. கருணாநிதியை பற்றி அவதூறாக பேசும் யாரையும் திமுக சும்மா விடாது. அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்.
ஜூன் 12 ஆம் தேதி காவிரி நீர் திறந்திருக்க வேண்டும். குறுவை சாகுபடி இல்லை. இப்போது மழை பெய்ததால் தண்ணீர் வருகிறது, உபரிநீரை இப்போது கொடுக்கிறார்கள். இதற்கு மேல் கர்நாடகா பூட்டி வைத்தால் அணை உடைந்துவிடும் என்பதால், வடிகாலாக தமிழகத்தை பயன்படுத்துகிறது.
ஒரு முதல்வர் கர்நாடகாவுக்கு செல்கிறாரா, இல்லையா என்பதை கூட வெளிப்படைத்தன்மையோடு அறிக்கை விடுவதற்கு வக்கற்ற அரசாக இது இருக்கிறது. நிர்மல் குமார் போன்றவர்கள் நாகரிகமற்ற முறையில் பேசுவதை நிறுத்த வேண்டும்.
காவிரி பிரச்சனை பற்றி எதுவுமே தெரியாத அமைச்சர்கள் இருப்பது தமிழ்நாட்டுக்கான அவமானம். இந்த மாதிரியான ஒரு மோசமான அரசை தமிழ்நாடு இதுவரை பார்த்ததில்லை. கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாமல் ஆட்சி செய்கிறார்கள்.
நாங்க கேட்ட கேள்விக்கு 24 மணி நேரத்தில பதில் சொல்லவில்லை என்றால் நீங்கள் தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யக்கூடிய துரோகிகள் என்றுதான் காவிரி டெல்டா விவசாயிகள் பார்ப்பார்கள் என்பதை இதன் மூலமாக நிர்மல் குமாருக்கு நான் எச்சரிக்கிறேன்.
தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்தி இருக்கிறார் முதல்வர் விஜய். ஒரு முதல்வர் இன்னொரு மாநிலத்துக்கு வருவதை வேண்டாம்னு சொல்லக்கூடிய அவமானம் முதல் முறையாக நடக்கிறது. தமிழ்நாட்டின் மீது இந்த அவமானத்தை கொண்டு வந்து சேர்த்த பழி விஜய்யை சாரும். தமிழ்நாட்டுக்கு பெரிய அவமானத்தை விஜய் தேடி கொடுத்துள்ளார். காவேரி டெல்டா விவசாயிகளை அவமானத்துப்படுத்தியுள்ளார், விவசாயிகளின் துரோக ஆட்சி இந்த தவெக ஆட்சி.” என்றார்.