

திருச்சி: தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக, பாஜக மீதான விமர்சனங்கள் முன்வைக்கும் முதல்வர் ஸ்டாலின், விஜய்யின் தவெக குறித்தோ, சீமானின் நாம் தமிழர் கட்சி குறித்தோ முதல்வர் ஸ்டாலின் பேசுவதை தவிர்த்து வருகிறார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இத்தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய இருபெரும் திராவிடக் கட்சிகள் தலைமையில் தனித்தனி கூட்டணிகளும், விஜயின் தவெக, சீமானின் நாதக ஆகிய இரண்டு கட்சிகளும் தனித்து 234 தொகுதிகளிலும் களம் காண்கின்றன. இதன் மூலம் இந்தத்தேர்தலில் 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருவாரில் தனது பிரச்சார பயணத்தை நேற்று மாலை தொடங்கினார்.
இன்று காலை திருச்சி தென்னூர் உழவர் சந்தையில் திருச்சி மாவட்டத்தில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். மாலையில் கரூர் ராயனூரில் நடைபெற்ற பிரச்சாரத்தில் கரூர் மாவட்ட திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து பேசினார்.
முதல்வர் பேச்சு முழுவதும் அதிமுக, பாஜக ஆகியவற்றை குறிவைத்தே உள்ளது. அதிமுக, பாஜகவை விமர்சனம் செய்து பேசும் முதல்வர் ஸ்டாலின், திருச்சி பிரச்சாரத்தில் சிஏஏ சட்டத்துக்கு பாட்டாளி அன்புமணி ராமதாஸ் ஆதரவாக வாக்களித்தார் என ஒருமுறை சுட்டிக்காட்டினார். மூன்று கூட்டங்களிலும் அதிமுக, பாஜக மீதான விமர்சனங்கள் மட்டுமே இருந்ததே தவிர, விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் குறித்தோ, தொடர்ந்து 3 தேர்தல்களாக தனித்தே களம் காணும் சீமானின் நாம் தமிழர் கட்சி குறித்தோ முதல்வர் ஸ்டாலின் பேசுவதை தவிர்த்து வருகிறார்.
ஆனால் முதல்வர் ஸ்டாலினையும், திமுகவையும் தவெக தலைவர் விஜயும், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் கடுமையாக விமர்சித்து வந்தாலும், அதைப் பற்றி முதல்வர் ஸ்டாலின் கிஞ்சித்தும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. இந்த 2 கட்சிகளும் போட்டியிலே இல்லை என்பது போல அவற்றை கண்டுகொள்ளாமல் சாதுர்யமாக நகர்ந்து செல்வதாக தெரிகிறது.
தேர்தல் நேரத்தில் அவர்களை பற்றி பேசி அவர்களை பெரிய ஆளாக்கிவிட வேண்டாம் என ஸ்டாலின் எண்ணுவதால் அவர்களை பற்றி பேசுவதை முதல்வர் தவிர்க்கிறார் என திமுகவினர் கூறுகின்றனர்.
அதேவேளையில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் போட்டியிடுகிறார். பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த விஜய், நாளை திருச்சி கிழக்கில் வேட்புமனு தாக்கல் செய்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
விஜய் பற்றி முதல்வர் ஸ்டாலின் 3 கூட்டங்களில் எதுவும் பேசாவிட்டாலும், விஜய் போட்டியிடும் திருச்சி கிழக்குத் தொகுதியில் அவரை எதிர்த்து களம் காணும் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜை ஆதரித்து இன்று காலை வாக்கிங் சென்று வாக்கு கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.