

சிவகங்கை: "கோயில் நகைகளை பல ஆண்டுகளாக யாரும் தொடவில்லை. ஸ்டாலின் அரசு நகைகளை எல்லாம் உருக்கிவிட்டது. அப்பகுதி மக்களை எல்லாம் வரவழைத்து, அந்த கோயிலில் உள்ள நகைகளைக் காட்டி வீடியோ கவரேஜ் செய்திருந்தால் பரவாயில்லை. ஆனால் யாருக்குமே தெரியாமல் செய்துவிட்டனர். எவ்வளவு நகை இருந்தது, எவ்வளவு உருக்கினார்கள், எவ்வளவு நகை ஆட்டயைப் போட்டார்கள் என்று தெரியவில்லை" என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்
சிவகங்கை தொகுதிக்குட்பட்ட அரண்மனை வாசல் பகுதியில் இன்று பிரச்சாரம் செய்த எடப்பாடி பழனிசாமி, “ இந்தப் பகுதியில் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு. ஜல்லிக்கட்டுக்காக பல அறிவிப்பு கொடுத்திருக்கிறோம். வடமாடு நிகழ்ச்சியும் புகழ் பெற்றது. அதிமுக உங்களுக்குப் பக்கபலமாக இருக்கும். ஜல்லிக்கட்டு நடைபெற 5 லட்ச ரூபாய் அதிமுக அரசு வந்ததும் வழங்கும். ஆன்லைன் முறை இப்போது உள்ளது, அதிமுக ஆட்சியில் ஏற்கனவே இருந்த பழைய முறையை அமல்படுத்துவோம். படுகாயம் அடைபவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு, காப்பீடு கொண்டுவந்து பிரீமியத்தை அரசே செலுத்தும்.
எடப்பாடி பழனிசாமி சங்கியாக மாறிவிட்டார் என்கிறார் ஸ்டாலின். அவதூறு கருத்தை சொல்கிறார். தோல்வி பயத்தால் காங்கிரஸ் காலை பிடித்து கெஞ்சி கூத்தாடி கூட்டணி வைத்திருக்கிறீர்கள். உங்க அப்பா கருணாநிதி சங்கி என்று ஒப்புக்கொள்கிறாரா? கருணாநிதி வாஜ்பாயோடு இருக்கார், முரசொலி மாறன் சங்கியா?. அண்மையில் காங்கிரஸ் திமுக கூட்டணியில் பிரச்சினை. கனிமொழி டெல்லிக்கு சென்று பார்த்தார். அப்படினா ஸ்டாலின் சகோதரி கனிமொழி சங்கியா? உங்கள் பதவிக்கு தக்கவாறு பேசி பழகுகுங்கள் எங்கள் தொண்டன் பேசத் தொடங்கினால் செவி கிழிந்துவிடும்.
இபிஎஸ் கையில் ரத்தக்கறை படிந்திருக்கிறதாம், புதிதாகக் கண்டுபிடித்திருக்கார், என் கை சுத்தமாக இருக்கு பாருங்கள். ஸ்டாலின் ஆட்சியில் 18 ஆயிரம் குழந்தைகள் பாலியல் சீண்டலுக்கு ஆளாகியுள்ளது. சுமார் 6000 பேருக்கு போக்சோவில் வழக்கின் மூலம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. சமூகநலத்துறை அமைச்சர் 6999 போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டு 84 கோடி நிவாரணம் வழங்கப்பட்டிருக்கிறது என்கிறார். இது ஒரு அமைச்சர் கொடுத்த வாக்குமூலம். இத்தனை சிறுமிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 18 ஆயிரம் குழந்தைகள் அப்பா அப்பா என்று கதறுவது உங்கள் செவிக்கு எட்டவில்லையா?
திமுக ஆட்சி நிர்வாகத்தில் சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பில்லை. அவதூறு பிரசாரத்தை மேலும் தொடர்ந்தால் எங்கள் தொண்டர்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். சிவகங்கை மாவட்டத்தில் கஞ்சா போதை ஆசாமிகள் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது சாலையில் நின்றவர்களை கொடூரமாக தாக்கினார்கள். கோவில் காவலாளி அஜித்குமார் மீது பொய் வழக்கு போட்டு விசாரணை என்ற பெயரில் படுகொலை செய்துள்ளனர், இதுதான் ரத்தக்கறை படிந்த கை. மானாமதுரையில் லாக்கப் டெத், இதுதான் ரத்தக்கறை படிந்த கை. ஸ்டாலின் திட்டமிட்டு அதிமுகவை பற்றி அவதூறு பேசுகிறார் அதற்கு தகுந்த பதிலடி உடனுக்குடன் கொடுக்கிறோம்.
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மோசமானதற்கு காரணம் நிரந்தர டிஜிபி கூட நியமிக்க முடியவில்லை. நீதிமன்றம் சொல்லியும் கூட இதுவரை நியமிக்கவில்லை. போதை பொருள் விற்பனை எல்லா இடத்திலும் நடக்கிறது, வேண்டும் வேண்டும் போதைப் பொருள் இல்லாத தமிழகம் வேண்டும் என்கிறார்கள். அதிமுக ஆட்சி இருக்கின்ற வரை போதை நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி வந்தோம். திமுக நிர்வாகிகள் துணையோடு போதை பொருள் விற்கப்படுவதால் தான் காவல்துறையால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. காவலர்களே போதை ஆசாமிகளால் பாதிக்கப்படுகிறார்கள்.
அதிமுக ஆட்சியில் அம்மா முதல்வராக இருந்தபோது தொழில் முதலீட்டாளர் மாநாடு நடத்தி 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டது, 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது, 4 லட்சத்து 70 ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், 5 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும், என மொத்தம் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தரப்பட்டது. அந்த ஒப்பந்தங்கள் எல்லாம் நடைமுறைக்கு வந்து தொழிற்சாலைகள் எல்லாம் இயங்கிவருகிறது. அம்மா வழியில் வந்த அரசு 2019 ஜனவரியில் முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி சுமார் 3 லட்சத்து 5 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டு, 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது. அதன் மூலம் பல தொழிற்சாலைகள் பயன்பாட்டுக்கு வந்தது, 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை கிடைத்தது. அதனால் உற்பத்தி பெருகியிருக்குது.
திமுக என்ன செய்தது? திமுக ஆட்சியில் தொழில் முதலீடு 1179 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், 15 லட்சத்து கோடி முதலீடு ஈர்க்கப்பட்டது என்று ஸ்டாலின் பச்சை பொய் சொல்கிறார், இதனால் 36 லட்சம் பேருக்கு வேலை கிடைத்ததாம், 77% ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டதாகச் சொல்கிறார். நிலம் எடுக்க வேண்டும், நிதி ஆதாரம் வேண்டும், அனுமதி வாங்க வேண்டும், கட்டடம் கட்ட வேண்டும், அதன் பிறகுதான் பயன்பாட்டுக்கு வரும். அதற்கு 3 முதல் 4 ஆண்டுகள் பிடிக்கும். ஆனால், அவர் கடந்த ஆண்டு தான் அறிவித்தார், உடனே பயன்பாட்டுக்கு வந்துவிட்டதாம். ஒரு மாவட்டத்துக்கு 90 ஆயிரம் ரூபாய் பேருக்கு வேலை கிடைத்திருக்க வேண்டும், எல்லாம் பொய். ஊடகம் உண்மை செய்தியை வெளியிட்டால் திமுக டெபாசிட் கூட வாங்காது.
தினமும் போட்டோ ஷூட் நடத்துவார் ஸ்டாலின், இதுதான் நடக்கிறது. வேறு எந்த சாதனையும் இல்லை. திட்டத்துக்கு பேர் வைப்பதில் நோபல் பரிசு கொடுக்கலாம். 52 குழு அமைத்து, தலைவர் போட்டாச்சு. ஆனால், எதுவும் செயல்படவில்லை. நான் சட்டமன்றத்தில் வெள்ளை அறிக்கை கேட்டேன். வெள்ளே பேப்பரைக் காட்டினார்கள். தினதோறும் விளம்பரம். ஒரு நாளைக்கு 4 கோடி ரூபாய்க்கு செலவாகிறது. இது யார் பணம் உங்கள் வரிப்பணம்.
கருணாநிதி முதல்வராக இருந்தார், அவருக்கு மெரினாவில் நினைவு மண்டபம் அமைத்தனர், அவருக்கு எழுதாத பேனாவை நடுக்கடலில் வைக்கிறார். அதுவும் உங்கள் வரிப்பணம் தான். நினைவிடம் முன்பு வைங்க, ஏன் நடுக்கடலில் வைக்கவேண்டும்? கருணநிதி குடும்பத்துக்கு 8 ஆயிரம் கோடி ரூபாய் டிரஸ்ட் பணம் இருக்கிறது. அதில் வையுங்கள். யார் வீட்டு பணத்தை எடுத்து யாருக்கு செலவு செய்வது..? அதற்குப் பதிலாக மாணவர்களுக்கு எழுதும் பேனாவைக் கொடுங்கள்.
அப்பா இப்படி என்றால் மகன் கார் பந்தயம் நடத்துகிறார். செருப்பு கூட இல்லாத மக்கள் இருக்கிறார்கள். இதெல்லாம் தெரியாமல் செல்வச் செழிப்பில் வாழ்கிறார்கள். நம்மைப்போல ஏழ்மையில் வாழ்ந்தால்தான் பணத்தின் அருமை தெரியும். அவர்கள் ஊதாரித்தனமாக செலவழிக்கிறார்கள். பிரச்னையை தீர்ப்பதற்கு செலவு பண்ணுங்கள். பழனியில் 162 கோடியில் 11 திட்டத்துக்கு செலவழிக்க முடிவுசெய்து டெண்டர் விட்டனர், அதை நீதிமன்றம் தடுத்துவிட்டது. அரசு பணத்தை எடுத்து செலவழிக்கலாமே. பக்தர்கள் காணிக்கையாக கொடுப்பது கோயிலுக்குத் தான். அந்த பணத்தை எடுத்து அதில் கமிஷன் பெறுகிறார்கள். கோயில் பணத்தை கூட விட்டுவைப்பதில்லை, முருகன் பார்த்துக்கொள்வார்.
கோயில் நகைகளை பல ஆண்டுகளாக யாரும் தொடவில்லை. ஸ்டாலின் அரசு நகைகளை எல்லாம் உருக்கிவிட்டது. எந்த அடிப்படையில் உருக்கினீர்கள்? அங்கங்கு ஒரு குழு நியமித்து, அப்பகுதி மக்களை எல்லாம் வரவழைத்து, அந்த கோயிலில் உள்ள நகைகளைக் காட்டி வீடியோ கவரேஜ் செய்திருந்தால் பரவாயில்லை. ஆனால் யாருக்குமே தெரியாமல் செய்துவிட்டனர். எவ்வளவு நகை இருந்தது, எவ்வளவு உருக்கினார்கள், எவ்வளவு நகை ஆட்டயைப் போட்டார்கள் என்று தெரியவில்லை. ஆண்டவன் சொத்தை அபகரித்தால் தக்க தண்டனை வழங்குவார்.
திமுக ஆட்சியில் மின்கட்டணம் கடுமையாக உயர்ந்துவிட்டது. வீடுகளுக்கு முதலில் 52% உயர்த்தினார்கள். ஆண்டுக்கு 5% என மூன்றாண்டுகளில் 15% உயர்த்தி, இப்போது 67% ஆக உள்ளது. கடைக்கு பீக் ஹவர் என்ற பெயரில் டபுள் சார்ஜ் வசூலிக்கிறார்கள். வீட்டுவரி 100% உயர்ந்துவிட்டது, ஆண்டுக்கு 6% உயர்வு என்று இரண்டு வருடத்தில் 12% ஏற்றிவிட்டனர். கடைக்கு வரி 150% உயர்ந்துவிட்டது, கடைக்கும் ஆண்டுக்கு 6% உயர்வு. போதாக்குறைக்கு குப்பைக்கும் வரி போட்டுவிட்டனர். மக்கள் மீது வரிச்சுமை சுமத்திய அரசு தேவையா?
நானும் ஒரு விவசாயி. இது விவசாயிகள் நிறைந்த பூமி. நாட்டுக்கு உணவளிப்பவர்கள் விவசாயிகள். பயிர்களுக்கு காப்பீட்டுத் திட்டத்தில் பிரீமியம் 5% இருக்கிறது, அதில் 2% கட்டினால் போதும். வறட்சி, இயற்கைச் சீற்றம் பாதிப்புக்கு காப்பீட்டு திட்டத்தில் கணக்கிட்டு இழப்பீட்டு தொகை அதிகமாக பெற்றுக்கொடுத்தோம். தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 2016ம் ஆண்டு அம்மா முதல்வராக இருந்தபோதும், அடுத்ததாக 2021ம் ஆண்டு நான் முதல்வராக இருந்தபோதும் என ஒரே அதிமுக ஆட்சியில் இரண்டுமுறை பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் மட்டும் சுமார் 12,100 கோடி ரூபாய் அளவுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
விவசாயிகள் பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்கு எந்நேரமும் மின் மோட்டாரை பயன்படுத்த ஏதுவாக மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் கொடுக்கப்பட்டது. திமுக ஆட்சியில் ஷிஃப்ட் முறையில் மின் விநியோகம் செய்யப்படுவதால் இரவு வேளையில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை உள்ளது. மீண்டும் அதிமுக ஆட்சியில் மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் கிடைக்கும்.
பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும். 5 சவரனுக்கு குறைவாக கூட்டுறவு வங்கியில் நகை அடகு வைத்தவர்களுக்குத் தள்ளுபடி என்று அறிவித்தார்கள். நம் மக்கள் என்ன நினைத்தார்கள். ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததும் ஒரு உத்தரவு போட்டார். ஒரு குடும்பத்தில் ஒருவருக்குத்தான் தள்ளுபடி கிடைக்கும் என்றார், எல்லா கூட்டுறவு சங்கத்திலும் பணத்தை கட்டச்சொல்லி நோட்டீஸ் விட்டனர். மக்களால் நகையை திருப்ப முடியவில்லை. இன்று இரண்டு மடங்கு விலையில் தங்கம் விற்கிறது. திமுக அறிவிப்பால் 48 லட்சம் பேர் கூட்டுறவு வங்கியில் நகையை அடகுவைத்து பணம் பெற்றனர், அதில் 15 லட்சம் பேருக்குத் தான் தள்ளுபடி செய்தனர், 33 லட்சம் பேர் ஏமாற்றப்பட்டனர்.
உதயநிதி பரப்புரைக்கு போனார். தாய்மார்கள் நகை போட்டிருந்தார்கள். அதைப் பார்த்து பொறுக்க முடியவில்லை. அதனால் வேகமாக போங்க, கூட்டுறவு வங்கியில் நகையை வையுங்கள் என்றார். தாய்மார்களும் ஓடோடிப் போய் நகையை அடகு வைத்தனர், பின்னர் நகையெல்லாம் போய்விட்டது, இன்று தங்கம் விலை அதிகரித்துவிட்டது.
525 வாக்குறுதிகளை கொடுத்து நான்கில் ஒரு பங்கு கூட நிறைவேற்றவில்லை மீண்டும் வெளியிட்டார். கல்விக் கடன் ரத்து செய்யவில்லை, காஸ் மானியம் கொடுக்கவில்லை, கூடுதல் சர்க்கரை கொடுக்கவில்லை, பெட்ரோல் டீசல் விலை குறைக்கவில்லை, 100 நாள் வேலைத்திட்டம் 150 நாட்களாக உயர்த்தவில்லை, இது அதிமுக ஆட்சியில் 150 நாளாக உயர்த்தப்படும்.
இப்போது புதிய அறிவிப்புகளை ஸ்டாலின் வெளியிட்டிருக்கிறார். நாம் அவர் அறிக்கையை பார்த்து காப்பி அடித்தோம் என்கிறார். 2021ல் முதலில் அதிமுக தான் தேர்தல் அறிக்கை வெளியிட்டது. அரை மணிநேரம் கழித்துதான் திமுக தேர்தல் அறிக்கை வந்தது. அப்போதே எல்லா மகளிர்க்கும் 1500 என்று அறிவித்தோம், அவர்கள் 1000 என்று சொன்னார்கள். நாங்கள் காப்பியடிக்கவில்லை, நம் அறிக்கையைப் பார்த்து திமுகதான் காப்பியடித்தது” என்றார்