முதல்வர் ஸ்டாலின் - இபிஎஸ் காரசார விவாதம்: பேரவையில் நடந்தது என்ன?

முதல்வர் ஸ்டாலின் - இபிஎஸ் காரசார விவாதம்: பேரவையில் நடந்தது என்ன?
Updated on
2 min read

சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி இடையே காரசார விவாதம் நடை பெற்றது.

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை திமுக உறுப்பினர் இ.பரந்தாமன் நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து, உறுப்பினர்கள் பேசியதாவது:

பி.தங்கமணி (அதிமுக): நாட்டிலேயே கடன் வாங்குவதில் முதல் மாநிலமாக தமிழகம் உள்ளது. பெட்ரோலுக்கு ரூ.5, சிலிண்டருக்கு ரூ.100 குறைப்பு, கல்விக் கடன், நீட் தேர்வு ரத்து, மாதம்தோறும் மின்கட்டண கணக்கெடுப்பு என நீங்கள் கொடுத்த வாக்குறுதிகள் ஆளுநர் உரையில் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், எதுவும் இல்லை. நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறை வேற்றாததால், தமிழகமே போராட்டக் களமாக மாறி வருகிறது.

பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு: தேர்தலின்போது எல்லா கட்சிகளும் வாக்குறுதி கொடுக்கும். நீங்கள் ஆட்சியில் இருந்தபோது, 58 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச பஸ் பாஸ், மோனோ ரயில், வீடு இல்லாதவர்களுக்கு 3 சென்ட், நிலம், இலவச செல்போன், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் என பல்வேறு வாக்குறுதிகளை அளித்தீர்கள். ஆனால், எதுவும் நடக்கவில்லை. இந்த ஆட்சியில் 90 சதவீத பணிகளை நிறைவேற்றி உள்ளோம். சொல்லாததையும் முதல்வர் செய்துள்ளார். ஆனால், பாராட்ட உங்களுக்கு மனம் இல்லை.

தங்கமணி: அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதற்கு அரசு தீர்வு காண வேண்டும்.

95 சதவீத பிரச்சினைகளுக்கு தீர்வு:

முதல்வர் ஸ்டாலின்: அரசு ஊழியர்கள் போராடுவதை மிகுந்த கவலை, வருத்தம், அக்கறையோடு எதிர்க்கட்சி உறுப்பினர் சொல்கிறார். இந்த அக்கறை உங்கள் ஆட்சியில் ஏன் இல்லை? அரசு ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களது பிரச்சினையை 95 சதவீதம் தீர்த்து வைத்துள்ளோம்.

நாங்கள் எஸ்மா, டெஸ்மா கொண்டு வரவில்லை. இரவோடு இரவாக கைது செய்யவில்லை. சிறையில் அடைக்கவில்லை. இதெல்லாம் கடந்தகால அதிமுக ஆட்சியில் நடந்தது. முதல்வராக இருந்தபோது அரசு ஊழியர்களை கொச்சைப்படுத்தி பேசியவர் எதிர்க்கட்சி தலைவர்.

எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: திமுக ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டம் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்தீர்கள். லட்சக்கணக்கான அரசு ஊழியர்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த நீங்கள், அவர்கள் வைத்த கோரிக்கையை நிறைவேற்றவில்லை. மாறாக, மத்திய அரசு அறிவித்ததில் சில மாற்றங்கள் செய்து அறிவித்துள்ளீர்கள்.

ஸ்டாலின்: 23 ஆண்டுகால பிரச்சினையை தீர்த்து வைத்துள்ளோம். அரசு ஊழியர் சங்கத்தினர் கோட்டைக்கு வந்து எனக்கு இனிப்பு ஊட்டினர். அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அது உங்களுக்கு பிடிக்கவில்லை. அதனால்தான் எதுவும் செய்யவில்லை என்கிறீர்கள். நீங்கள் எதுவும் செய்யவில்லை என்பதை ஒப்புக்கொள்ளுங்கள்.

தேர்தலில் ரிசல்ட் தெரியவரும்:

பழனிசாமி: உங்களுக்கு சாதகமான சங்கத்தினர்தான் இனிப்பு ஊட்டினர். எல்லா சங்கத்தினரும் வரவில்லை. பல சங்கங்கள் இன்னும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இவை எல்லாம் அரசு ஊழியர்களுக்கு தெரியும். வரும் தேர்தலில் அதற்கான ரிசல்ட் தெரியும்.

ஸ்டாலின்: முழுவதுமாக நிறைவேற்றிவிட்டோம் என்று சொல்லவில்லை. இன்னும் சில பிரச்சினைகள் உள்ளன. சத்துணவு, அங்கன்வாடி அமைப்பாளர்கள், பகுதிநேர ஆசிரியர்களை அழைத்துப் பேசி வருகிறோம். அவர்களது கோரிக்கைகள் இயன்றவரை நிச்சயம் நிறைவேற்றப்படும். கவலைப்பட வேண்டாம். அடுத்ததும் திமுக ஆட்சிதான்.

பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ்: கடந்தகால ஆட்சியில், ‘எங்களை அழைத்துப் பேசுங்கள்’ என்பதற்காகவே அரசு ஊழியர்

கள் போராட்டம் நடத்தினர். 1.78 லட்சம் பேரை ஒரே கையெழுத்தில் வீட்டுக்கு அனுப்பினீர்கள். இந்த ஆட்சியில் அரசு ஊழியர்களை அழைத்து முதல்வர் 15 முறை பேசியுள்ளார். இதையும் அரசு ஊழியர்கள் பார்த்துக்கொண்டுதான் உள்ளனர்.

அனைத்து ஊழியர்களும் ஏற்பு:

அமைச்சர் எ.வ.வேலு: பழைய ஓய்வூதியத் திட்டத்தையும் உள்ளடக்கியதுதான் தற்போதைய திட்டம். இதை அனைத்து அரசு ஊழியர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். முதல்வருக்கு பாராட்டு விழா நடத்த முடிவு செய்து, தேதி கேட்டுள்ளனர்.

பழனிசாமி: பழைய ஓய்வூதியத் திட்டம் நிறைவேற்றப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்தீர்கள். பங்களிப்பே இல்லாமல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அப்படியே செயல்படுத்த வேண்டும் என்பது அரசு ஊழியர்களின் முக்கிய கோரிக்கை.

ஆனால், நீங்கள் பங்களிப்புடன் கூடிய திட்டத்தை அமல்படுத்தி உள்ளீர்கள். அதனால்தான் பெரும்பாலான அரசு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஒருசில சங்கங்கள் மட்டுமே உங்களை ஆதரிக்கின்றன. அதுதான் யுதார்த்தமான உண்மை. இவ்வாறு பேரவையில் விவாதம் நடைபெற்றது.

முதல்வர் ஸ்டாலின் - இபிஎஸ் காரசார விவாதம்: பேரவையில் நடந்தது என்ன?
ஜன.26-ம் தேதி வரை மழை வாய்ப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in