எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தவர்கள் இடைத்தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு: ஐகோர்ட் தள்ளுபடி

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தவர்கள் இடைத்தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு: ஐகோர்ட் தள்ளுபடி
Updated on
1 min read

சென்னை: அரசியல் காரணங்களுக்காக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தவர்கள், இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யும்போது, தேர்தல் செலவை டெபாசிட் செய்யவும், 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்யவும் உரிய சட்டத்திருத்தம் கொண்டு வர உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தேர்தல் முடிவுகள் வெளியான குறுகிய காலத்தில், மக்கள் தீர்ப்பை புறக்கணித்து அரசியல் காரணங்களுக்காக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததால், இடைத்தேர்தலில் அவர்கள் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யும்போது, தேர்தல் செலவை டெபாசிட் செய்யும் வகையில் உரிய நடைமுறையை வகுக்கும் படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞர் சுதன் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், இந்த வழக்கு முடியும் வரை மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், எந்த காரணமும் இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு வாரங்களில் ராஜினாமா செய்துவிட்டு, வேறொரு கட்சியில் வேட்பாளராக தேர்தலில் போட்டியிடுகின்றனர்; இடைத்தேர்தல் செலவுக்கு பொறுப்பாக்கும் வகையில் தேர்தல் செலவை வசூலிக்க வேண்டும்; அதற்கு எந்த சட்டமும் இல்லாததால், நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியும்; சட்டத்திருத்தம் கொண்டுவராவிட்டால், ஒட்டுமொத்தமாக அனைத்து எம்எம்ஏக்கள் ராஜினாமா செய்தால் என்னாவது என வாதிடப்பட்டது.

தேர்தல் ஆணையம் தரப்பில், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, தங்களுக்கு எந்த பங்கும் இல்லை; இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என சுட்டிக்காட்டப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், “நீதிமன்றம் சட்டத்திருத்தம் கொண்டுவர முடியுமா ? நாடாளுமன்றம்தான் சட்டம் இயற்ற முடியும்.” என மனுதாரருக்கு கேள்வி எழுப்பியதுடன், வழக்கின் மீதான தீர்ப்பை தள்ளிவைத்திருந்தனர்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த தலைமை நீதிபதி அமர்வு, வழக்கறிஞர் சுதனின் வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது. மேலும், சட்டம் இயற்றுவது என்பது நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பந்தபட்ட விவகாரம் என்றும் நீதிபதிகள் உத்தரவில் விளக்கம் அளித்துள்ளனர்.

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தவர்கள் இடைத்தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு: ஐகோர்ட் தள்ளுபடி
அரசு மருத்​து​வ​மனை​களில் குழந்தைகள் மருந்து தட்டுப்பாடு: கனிமொழி எம்.பி. புகார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in