

சென்னை: நகரில் டெங்கு ஒழிப்பு பணியில் 3,597 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட் சியில் அனைத்து மண்டலங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் கொசு ஒழிப்பு, டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சுகாதாரப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், ஆணையர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஜி.எஸ்.சமீரன் பேசியதாவது: மாநகராட்சியில் அனைத்து மண்டலங்களிலும் கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். அனைத்து கல்வி நிறுவனங்களிலும் இப்பணிகளை மேற்கொண்டு தொடர் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும்.
மக்களை பாதுகாப்பதில் அலுவலர்கள் முழு ஈடுபாட்டுடன் பணியாற்ற வேண்டும். கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் தடுப்புப் பணியில் மொத்தம் 3,597 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொசு ஒழிப்புப் பணிகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பயிற்சிகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பணியாளரும் தினமும் 80 முதல் 100 வீடுகளைப் பார்வையிடுகின்றனர்.
மாநகரப் பகுதியில் காலியாக உள்ள நிலங்கள், வணிக வளாகங்கள், புதிய கட்டுமான இடங்கள், கல்வி நிறுவனங்கள், விடுதிகள், மருத்துவமனைகள், அரசு கட்டிடங்கள், வீடுகள் மற்றும் சுற்றப்புறப் பகுதிகளில் கொசு உற்பத்தியாகும் இடங்கள் மற் றும் கொசுப்புழு உருவாக வாய்ப் புள்ள தேங்காய் மட்டை, ஓடுகள், கண்ணாடிப் பொருட்கள், டயர் உள்ளிட்ட தேவையற்ற பொருட்கள் மாநகராட்சிப் பணியாளர்கள் மூலம் கண்டறியப்பட்டு அவற்றை அழிக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 3 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 161 நபர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுபோல் மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார். இக்கூட்டத்தில் துணை ஆணையர் (சுகாதாரம்) தாக்கரே சுகம் ஞான தேவராவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.