

சென்னை: சென்னை மாநகராட்சியில் 2026-27 நிதியாண்டின் முதல் அரையாண்டில் சொத்து வரி மற்றும் தொழில் வரி என ரூ.1,446 கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாநகராட்சியின் பிரதான வருவாய் இனங்களில் சொத்து வரி மற்றும் தொழில் வரி முக்கிய இடத்தில் உள்ளன. மாநகராட்சியில் 2026-27 நிதியாண்டின் முதல் அரையாண்டில் சொத்து வரியாக ரூ.1,124.69 கோடியும், தொழில் வரியாக ரூ.312.06 கோடியும் என ரூ.1446.75 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
சொத்து வரியை 9.20 லட்சம் சொத்து உரிமையாளர்களும், தொழில் வரியை 45 ஆயிரம் வணிகர் மற்றும் தனி நபர்களும் முழுமையாக செலுத்தியுள்ளனர்.
முதலாம் அரையாண்டில் வசூலிக்கப்பட்ட சொத்து வரி மற்றும் தொழில் வரி தொகையானது கடந்த ஆண்டின் வரி வசூலைக் காட்டிலும் வளர்ச்சி விகிதம் முறையே 12.95 சதவீதம் மற்றும் 6.89 சதவீதம் அதிகமாக உள்ளது. இது மாநகராட்சியின் சாதனையாக கருதப்படுகிறது.
முதலாம் அரையாண்டின் இறுதி நாளான செப்.30-ம் தேதி மட்டுமே சொத்து வரி வசூல் ரூ.50.26 கோடி மற்றும் தொழில் வரி வசூல் ரூ.45.94 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்த வளர்ச்சியானது முறையான அலுவலர்களின் கண்காணிப்பு, கள ஆய்வில் நுண்ணிய மதிப்பாய்வு மற்றும் அலுவலர்களுக்கு உரிய திட்டங்கள் வகுத்து பகிர்ந்தளித்ததன் மூலமாகவும், கடந்த ஜூலை மாதம் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர வசூல் மூலமாகவும், நிர்ணயிக்கப்பட்ட இலக்கானது மாநகராட்சியால் எட்டப்பட்டுள்ளது.
சொத்து வரி மற்றும் தொழில் வரியை உரிய காலத்தில் செலுத்தி, மாநகராட்சி கட்டமைப்பு பணிகளுக்கு உதவிய பொதுமக்களுக்கு மாநகராட்சி சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.