பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் பதிவு முறையில் மாற்றம்: வகுப்புகள் 6-ல் இருந்து 4 ஆகக் குறைப்பு

தமிழக அரசு அரசாணை வெளியீடு
பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் பதிவு முறையில் மாற்றம்: வகுப்புகள் 6-ல் இருந்து 4 ஆகக் குறைப்பு
Updated on: 
1 min read

சென்னை: பொதுப்பணித்துறையில் நடைமுறையில் உள்ள ஒப்பந்ததாரர் பதிவு முறையை 6 வகுப்புகளில் இருந்து 4 வகுப்புகளாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை: சட்டப்பேரவையில் பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ்அர்ஜுனா வெளியிட்ட அறிவிப்பின்படி, ஒப்பந்ததாரர் பதிவு முறை 6 வகுப்புகளில் இருந்து 4 வகுப்புகளாகக் குறைக்கப் பட்டுள்ளது.

அதன்படி, வகுப்பு 1 ஒப்பந்ததாரர்கள் ரூ.10 கோடிக்கு மேற்பட்ட பணிகளையும், வகுப்பு 2 ஒப்பந்ததாரர்கள் ரூ.5 கோடி முதல் ரூ.10 கோடி வரையிலானபணிகளையும் மேற்கொள்ளலாம். இவர்களுக்கான சால்வென்சி தொகை முறையே ரூ.1.50 கோடி, ரூ.75 லட்சம் ஆகும். வகுப்பு 3 ஒப்பந்ததாரர்கள் ரூ.1 கோடி முதல் ரூ.5 கோடி வரையிலான பணிகளை மேற்கொள்ளலாம்.

சால்வென்சி தொகை ரூ.15 லட்சம். வகுப்பு 4 ஒப்பந்ததாரர்கள் ரூ.1 கோடி வரையிலான பணிகளை மேற்கொள்ளலாம். இவர்களுக்கு பதிவு மதிப்பில் 15 சதவீதம் சால்வென்சி தொகையாகவும், அதிகபட்சமாக ரூ.7.50 லட்சம் வரையிலும் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

ரூ.10 கோடிக்கு மேற்பட்ட திட்டப் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள், கொள்முதல் மதிப்பில் 15 சதவீதத்தை மின்வங்கி உத்தரவாதமாகச் சமர்ப்பிக்க வேண்டும். இந்த உத்தரவாதம் பணிக்காலம் மற்றும் பொறுப்புக் காலம் முடியும்வரை செல்லுபடியாக இருக்க வேண்டும்.

மேலும், ஒரே நபர் அல்லது நிறுவனம் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ பெறுவதைக் கட்டுப்படுத்த புதிய விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

உரிமையாளர், பங்குதாரர்கள், இயக்குநர்கள் அல்லது நிர்வாகக் கட்டமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டால் பதிவு அதிகாரியிடம் தெரிவித்து முன்அனுமதி பெற வேண்டும். பினாமி பதிவு, போலி ஆவணங்கள் மற்றும் தவறான தகவல்கள் மூலம் பதிவு பெறுவது கண்டறியப்பட்டால், பதிவு ரத்து செய்யப்படுவதுடன் கருப்புப் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், புதிய பதிவுக்கான விண்ணப்ப கட்டணம் ரூ.10 ஆயிரமாகவும், பதிவு மற்றும் வகுப்பு உயர்வுக்கான கட்டணம் ரூ.1 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் பதிவு முறையில் மாற்றம்: வகுப்புகள் 6-ல் இருந்து 4 ஆகக் குறைப்பு
கூடலூரில் வனத்துறை கூண்டில் மேலும் ஒரு புலி சிக்கியது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in