

கூடலூர் அருகே ஓவேலி லாரஸ்டன் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கூண்டில் சிக்கிய புலி.
கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே வனத்துறை வைத்திருந்த கூண்டில் இரண்டாவது புலி சிக்கியுள்ளது. அந்த புலியை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூடலூர் ஓவேலி, லாரஸ்டன் பகுதிகளில் கடந்த ஆகஸ்ட் 9 மற்றும் 21 ஆகிய தேதிகளில் புலி தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர். ஆட்கொல்லி புலியை பிடிக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டதையடுத்து, வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, 13 இடங்களில் கூண்டுகள் அமைத்தனர். அதன் பலனாக கடந்த செப்டம்பர் 18-ம் தேதி ஆட்கொல்லி புலி கூண்டில் சிக்கியது. பின்னர் அந்த புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில், அதே பகுதியில் வயது முதிர்ந்த மற்றொரு புலி சுற்றித்திரிவது வனத்துறையினரால் கண்டறியப்பட்டது. முதுமை காரணமாக அந்த புலி கிராமப்புற பகுதிகளுக்கு வருவதாகவும், தொடர்ந்து மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக மாறக்கூடும் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், நேற்று அதிகாலை சில்வர் கிளவுட் அருகே ஹாலல்லா பகுதியில் வனத்துறையினர் அமைத்திருந்த கூண்டில் வயது முதிர்ந்த ஆண் புலி சிக்கியது. வனத்துறையினர் கூறும்போது, “பிடிப்பட்ட ஆண் புலிக்கு சுமார் 13 வயது இருக்கும். முகம், முன் காலில் பலத்த காயம் உள்ளது. புலியை முதலில் முதுமலைக்கு கொண்டு சென்று மருத்துவ பரிசோதனை மற்றும் உடல்நிலை மதிப்பீடு மேற்கொள்ளப்படும். பின்னர், தேவையான நடைமுறைகளை பின்பற்றி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு அனுப்பப்படும்” என்றனர்.